மழைபெய்தால் ஆறாகும் படுவான்கரை வீதிகள்

– படுவான் பாலகன் –
மாரி பிறந்தால் வீதிகளெல்லாம் ஆறாவதும், போக்குவரத்து தடையாகுவதும் வருடாந்தச் செய்திகளாகின்றன. படுவான்கரைப்பகுதியில் உள்ள வீதிகள் பெரும்பாலானவை, கிறவல்களை கொண்டு அமைக்கப்பட்டவையே. இதனால் வீதிகள் பள்ளங்களாவதும், பயணிகள் வீழ்ந்து எழுந்து செல்வதுமே பழகிப்போனதொன்று என மாசிலாமணியும், நல்லதம்பியும் மாவடிமுன்மாரி பாலத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, தமது ஊரான, நாற்பதுவட்டை கிராமத்திற்கு செல்வதற்காக, வருகை தந்த நல்லதம்பியும், மாசிலாமணியும் மாவடிமுன்மாரி வயலூர் முருகனை கடந்து, பாலத்தினை அடைந்ததும் வீதியைக்காணாது, ஆற்றையையே கண்டு அஞ்சி நின்றனர். பாலத்தில் நின்ற இருவரும், கடந்த காலத்தினையும் மீட்டிப்பார்த்து பேசிக்கொண்டனர்.
அருகில் உள்ள வயலினைவிட, வீதி பள்ளமாகிவிட்டது, அருகில் இருந்த வாய்க்காலும் வீதியும் சமனானதால், காடுகளிலிருந்தும், குளங்களிலிருந்தும் ஓடிவருகின்ற நீர் வீதியின் ஊடாக கடந்து செல்கின்றது. இந்நிலை தற்போது உருவானதல்ல. கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவருகின்றதொன்று. இவ்வீதியின் ஊடான போக்குவரத்து துண்டிக்கப்படுவதும் வழமையானதொன்று, இதனால் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்லமுடியாத மற்றும் தாந்தாமலை, நாற்பதுவட்டை, மக்களடியூற்று ஆகிய பகுதிகளுக்கு மக்கள் செல்வதும் கடினமானதொன்றாகவே மாறிவிடுகின்றது. நான்கு, மூன்று அடிக்குமேல் நீர், இவ்வீதியினால் பாய்வதினால் வாகனங்களை செலுத்தமுடியாது. அதேவேளை, வீதியில் பள்ளங்கள் இருப்பதினால் ஆபத்துநிறைந்த போக்குவரத்துமாகவே மாறிவிடுகின்றது. இவ்வீதியில் பயணித்த ஒருவர் நீரினால் அடித்துச்செல்லப்பட்டு மரணித்த சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. சிறுமழைக்குகூட தண்ணீர் தேங்கி நிற்கும் பெருமைமிகு வீதியாக உள்ளதாக நல்லதம்பி கூறுகின்றார். இதைவிடவும் இன்னமும் பெருமை சேர்க்கின்ற வீதியாகவும் இவ்வீதியுள்ளதாக குறிப்பிட்டார்.
மழைகாலத்தில் ஆறாகவும், கோடைகாலத்தில் கிறவல் புழுதிக்கும் பெயர்போன வீதியாக இவ்வீதியுள்ளதாகவும் பலருக்கு இவ்வீதியின் பெருமை தெரியுமெனவும், குறிப்பிட்ட மாசிலாமணி, இவ்வீதியின் நிலைதொடர்பில் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் குறிப்பிட்டும், ஒருதிட்டத்தில் உள்வாங்கி உள்ளதாக குறிப்பிடுகின்றார்கள், அடுத்த மாதம், அடுத்த வருடம் என கூறிகூறி பலவருடங்களை கடத்திவிட்டனர். ஆனால் எதுவுமே நடந்ததாக தெரியவில்லையென நல்லதம்பி புறுபுறுத்துக் கொண்டார்.

படுவான்கரைப்பிரதேசத்தில் மழை பெய்ய ஆரம்பித்தால், பல வீதிகளினூடாக நீரோட ஆரம்பிக்கும், வீதிகள் துண்டு, துண்டாக உடைப்பெடுக்கும் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை சுமக்க வேண்டிய நிலையேற்படும். இதனை அனுபவிப்பவர்களுக்குதான், அதனது வலிகள்புரியும். மாரி மழை பெய்து நிறைவடைய, புதிய வருடம் பிறக்கும், புதிய வருடத்தில் நெல் அறுவடைகளும் ஆரம்பிக்கும். மாரிமழையால், வீதிகள் உடைந்து காணப்படும். அறுவடை செய்வதற்கு, வாகனங்களை கொண்டு செல்வதற்கு, அறுவடை செய்த நெற்களை வீடுகொண்டு சேர்ப்பதற்கு பல பிரயத்தனங்களையும், செலவீனங்களையும் செலவு செய்ய வேண்டியேற்படும். இதனால் வீதிகளைப் பார்த்து சலிப்படையும் சமுகமாக படுவான்கரை சமுகத்தினர் மாறியுள்ளனர். இவ்வற்றிற்கு நிரந்தர தீர்வினை வழங்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றதா? என நல்லதம்பியைப் பார்த்து மாசிலாமணி வினவினார். இதற்கு பதிலளிக்க ஆரம்பித்த மாசிலாமணி, படுவான்கரைப்பிரதேசத்தில் வீதி அபிவிருத்திகள் சிறப்பாக நடைபெறவில்லை. அரசினால், வீதி அபிவிருத்தி பெரியளவில் மேற்கொள்ளப்படவுமில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் இல்லையென்றால், கிராமங்களில் உள்ள பல வீதிகள் ஒழுங்கைகளாகவும், மணல்வீதிகளுமாகவே காணப்படும். நிறுவனங்களின் உதவியினாலேயே, பல வீதிகளுக்கு கிறவல் இடப்பட்டு, ஓரளவு போக்குவரத்து செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

அரசினால் செய்யப்பட்ட ஒருசில வீதிகளும் தொடர்ச்சியாக உடைவதும், அவ்விடத்தினை ஒட்டுவதுமே நடந்தேறுகின்றது. தார்வீதிகளாக மூன்று தசாப்தத்திற்கு முன்பு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் சில தார் இன்றி கிறவல் வீதியாகவே காட்சியளிக்கின்றன. பெயருக்குதான் வீதியென்று சொல்லுமளவிற்கு பல வீதிகள் இருக்கின்றன. மழைபெய்து நீரும் வடிந்துவிட்டால், வீதிகளிலெல்லாம் மண்நிரம்பிக் காணப்படும், இதனால் இவ்வீதிகளில் வாகனங்களை செலுத்த முடியாது. ஆகமொத்தத்தில், வீதியென்ற பெயருடன் பல வீதிகளும், மாரி கால ஆறுகளாக வீதிகளும், குளங்களாக வீதிகளும், மணல்பரப்புக்களான வீதிகளுமே நிரம்பியுள்ளன. எனக்கூறிவிட்டு பொருட்களை தலையிலே சுமந்து கொண்டு வாகனத்தினையும் மெதுமெதுவாக தள்ளிக்கொண்டு மாவடிமுன்மாரி வீதியினை நல்லதம்பியும், மாசிலாமணியும் கடந்தனர்.
தற்கால உலகில் போக்குவரத்தென்பது மிகமுக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. ஆனாலும், போக்குவரத்து செய்வதற்கான பேரூந்து வசதிகள் இன்றி அன்றாடம் பலமணி நேரங்களை கால்நடையில் செலவிடுகின்றவர்களாக படுவான்கரை மக்கள் உள்ளனர். இதற்கு வீதிகள் ஒழுக்கின்மையும் மிகவும் முக்கிய காரணமே. இவற்றினை தீர்ப்பதன் மூலம் பல மணிநேரங்களை மீதியாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், காரியங்களும் இலகுவாக்கப்படும். இதற்காக, இம்மக்களின் துயர்துடைக்க முன்வரவேண்டும்.