மட்டக்களப்பு படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பிலிருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் வீதி. (இவ் வீதி கொழும்பு–மட்டக்களப்பு வீதி), செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை செல்லும் வீதி. (பதுளைவீதி), மட்டக்களப்பிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைசெல்லும் பிரதானவீதி என 3 பிரதான வீதிகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
1070 சதுரமைல் பரப்பளவினை உடைய மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரிலிருந்தான தெற்குப் பிரதேசத்தினை 42 சதுரமைல் பரப்பினை உடைய மட்டக்களப்பு வாவி இரண்டு கூறுகளாகபிரிக்கின்றது. இவற்றுள் வாவியின் கிழக்குப்பகுதியில் உள்ள பிரதேசம் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் உள்ள பிரதேசம் படுவான்கரை என்றும் பன்னெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இதில் மட்டக்களப்பில் இருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் பிரதானவீதி 1923 ஆம் ஆண்டு கல்லடிப் பாலம் அமைக்கப்பட்டது முதல் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று கார்பட் வீதியாக மிளிர்கின்றது. ஆனால் படுவான்கரையில் இவ்வாறானஒருவீதி ஒரே வீதியாக ஒரே பெயரில் ஒரே நிருவாகத்தின் கீழ் இல்லை.இது ஒரு பாரிய குறைபாடாக இனம் காணப்பட்டுள்ளது. இக்குறைபாடு நீக்கப்படவேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளரான இக்கட்டுரையாளரின் ஆதங்கம்.
படுவான்கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டவீதி அமைப்புக்களையே இப்போதும் கொண்டிருக்கிறோம். எனவே இவ் வீதியை அகலப்படுத்தி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படும் போது வீதி அமைப்புக்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யமுடியுமா என்பது பற்றி பொறியிலாளர்கள் சிந்திக்கவேண்டும். உதாரணமாக மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சந்தியிலிருந்து மண்முனைச்சந்தி (தாழங்குடா) வரையில் தற்போது பிரதான வீதியாக பயன்படுத்தப்படும் வீதிமுன்பு இருந்ததில்லை.மேற்படி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து வாவிக்கரை ஓரமாக மண்முனைச் சந்திவரை செல்லும் வீதியே பிரதான வீதியாக முன்பு பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்புதான் தற்போதுள்ள பிரதான வீதி பயன்பாட்டிற்கு வந்தது. இதே போன்று படுவான்கரையின் 42கி.மீ. நீளவீதி அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா என்பது பற்றி சிந்திக்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை அதிகரிப்பும் அவர்களது தேவைகளும் தொடர்புகளும் அதிகரித்துவிட்ட இக்கால கட்டத்தில் அதற்கேற்ப மாற்றங்களும் அவசியமாகின்றது. தற்போது மட்டக்களப்பில் இருந்து தம்பலவத்தை வரை பயன்படுத்தப்படும் மேற்படிவீதி 42கி.மீ. நீளமுடையதாகும் இவ் வீதி முழுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள்ளேயே அடங்கி உள்ளது.மட்டக்களப்பிலிருந்து புதூர், வலையிறவுப் பாலம், வவுணதீவுச் சந்தி, மண்டபத்தடி, குறிஞ்சாமுனை, மணற்பிட்டிச்சந்தி, (கொக்கட்டிச்சோலை) வால்கட்டுச்சந்தி, தாமரைப்பூச்சந்தி (அம்பிளாந்துறை), தும்பங்கேணிச்சந்தி, பிலாலிவேம்பு, வெல்லாவெளி, மண்டூர், பாலமுனை, தம்பலவத்தை,என நீண்டுசெல்கின்றது இவ்வீதி.
நீண்ட பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்லும் இவ் வீதியில் 07க்கு மேற்பட்டவீதிகள் 07க்கு மேற்பட்ட பெயர்களுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித்திணைக்களம் ன இரண்டுநிருவாகங்களின் கீழ் வருகின்றன. அவை பற்றிய விபரம் பின்வருமாறு:
வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய பி.ரி.11 – மட்டக்களப்பு நகர மணிக் கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து பஸ் நிலையம் வாவிக்கரை ஓரமாகச் செல்லும் வீதி, பி.ரி. 21 – வீச்சுக் கல்முனை வீதி, பி.ரி.-02- வலையிறவு இணைப்பு வீதி, பி.ரி- 20- வலையிறவுப் பால வீதி, பி.ரி- 62- வவுணதீவு கொக்கட்டிச்சோலை வீதி, மணற்பிட்டிச் சந்தியிலிந்து வால்க்கட்டு ஊடாக தாமரைப்பூச் சந்திவரை செல்லும் பிரதானவீதி, விதி அபிவிருத்தித் அதிகாரசபைக்குரிய தாமரைப்பூச் சந்தியிலிருந்து தம்பலவத்தை வரையான பிரதான வீதி (அதாவது தற்போதைய அம்பிலாந்துறை வீதியின் ஒருபகுதி ஆகியனவாகும்.
மேற்படிவீதிகள் அனைத்துமே சீ-தர வீதிகள் ஆகும.; எனவேமேற்படி 07 வீதிகளையும் ஒரேபெயரில் ஒரே வீதியாக கெசற்மூலம் அங்கீகரித்துஅதற்கு பி-தர கொடுப்பதுடன் வீதிக்கு பெயரொன்றையும் இட்டுவீதிக்கான இலக்கமும்கொடுக்கப்படவேண்டும்; இவ்வீதிக்குமட்டக்களப்பு படுவான்கரைபிரதானவீதியெனபெயரிடலாம்.
மேற்படிவீதியில்அகலவழிப் பாதைஅமைப்பதில் பிரச்சினைகுறைவுஎன்பதால் 4வழிச் சாலையாக இதனை நிர்மாணித்து அவற்றுள் இரண்டு வழித்தடத்தினை கடுகதி நெடுஞ்சாலையாக அமைப்பதன் மூலம் தற்போது மட்டக்களப்பு கல்முனை வீதியில் இடம் பெறும் விபத்துக்களை பெருமளவு குறைக்க முடியும்.இப்போதே இன்னும் 33 வருடங்களை தூர நோக்குடன் சிந்திப்போமாக இருந்தால் 06 வழிச் சாலையாக அமைப்பதே உகந்த செயற்பாடாகும். ஏனெனில் புவிச்சரிதவியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 2050ம் ஆண்டளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையுள்ள எழுவான்கரை கிராமங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிடுமென எதிர்வு கூறப்படுகின்றது.அந்தளவிற்கு பூமியின் வெப்பநிலை அதிகரித்து கடல் மட்டம் உயரும் எனவும் கூறப்படுகின்றது.
முன்மொழியப்படும் இவ்வீதிஅமைக்கப்படுகையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற மாதிரி இல்லாமல் தூர நோக்குடன் முறையாக திட்டமிட்டு செய்யப்படவேண்டும.; இவ்வீதி கடுக்காமுனை குளத்தினை ஊடறுத்துச் செல்கின்றது. குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி வீதியின் மேற்குப் பக்கமாக உள்ளதால் மழைநீர் குளத்திற்கு வரக்கூடியதாக 0.25 கி.மீ.மஅ தூரம் ஓந்தாச்சிமடத்தில் உள்ளது போன்று 5அடிஉயரமான மேம்பாலம் அமைக்கப்படவேண்டும் மற்றப்படிநீர் வழிந்தோடக்கூடிய மாதிரி கோஸ்வே அமைக்கப்படக் கூடாது.
மேற்படிவீதியின் மணற்பிட்டிச் சந்தியிலிருந்து தெற்கே வால்க்கட்டுச் சந்தி வரையான 2.2கி.மீ. நீளமான கற்பாதை போன்று ஒரு வீதியினை இலங்கையில் வேறு எங்குமே காணமுடியாது. இந்த இடத்திலே தான் கிழக்கின் உள்நாட்டுயுத்தம் மையம் கொண்டிருந்தது. யுத்தத்தின் கோரவடுக்களை இப்போதும் இவ்வீதியில் காணமுடியும்.வால்க்கட்டு சந்தியிலிருந்து தெற்கேதாமரைப்பூச் சந்திவரையான 2.6கி.மீ. வீதி3அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது உடனடி அவசரத் தேவையாகஉள்ளது. மேற்படி தாமரைப்பூச் சந்திக்கும் வால்கட்டுச் சந்திக்கும் இடையிலே தான் கடுக்காமுனைக்குளம் ஊடறுக்கிறது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டபிரதேசங்களின் உட்கட்டமைப்புஅபிவிருத்திகள் தொடர்பாககடந்த 8 வருடங்களில் மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அப்படியானால் உள்நாட்டுயுத்தம் மையம் கொண்டிருந்த இந்த 4.8கி.மீ. நீளமானவீதிகச்சேரிதிட்டமிடல் உத்தியோகத்தர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கவனிக்கப்படாதது ஏன் என்பதுதெரியவில்லை.
மட்டக்களப்புமாவட்டத்தின் தெற்கில் எழுவான்கரையில் காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி என மூன்றுபிரதேசசெயலாளர் பிரிவுகளும் படுவான்கரையில் மூன்றுபிரதேசசெயலாளர் பிரிவுகளும் இருக்கின்றன.மேலும் படுவான்கரை 90 வீதமானநிலப்பிரதேசத்தினைக்கொண்டுள்ளது. எனினும் தரம்மிக்கஒருவீதியின்மைகாரணமாக இப்பிரதேசம் பெருமளவுஅபிவிருத்திகுன்றிக்காணப்படுகின்றது. இம் மூன்றுபிரதேசசெயலாளர் பிரிவுகளினதும் மக்கள் தொகைபின்வருமாறு.
2013ம் ஆண்டுபுள்ளிவிபரத்தின்படி போரதீவுப்பற்று (வெல்லாவெளி) –43598, பட்டிப்பளை (மண்முனை தென் மேற்கு) –26469, வவுணதீவு (மண்முனை மேற்கு)- 30205 என அண்ணளவாக ஒரு லட்சம் மக்கள் தொகையினை உடைய இப்பிரதேசத்தினை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றனர் என்பதற்குமணற்பிட்டிசந்திக்கும் தாமரைப்பூச் சந்திக்கும் இடையிலான 4.8கி.மீ. நீளமானவீதி தற்போதும் ஒரு சான்றாக திகழ்கின்றது. ச மூகசெயற்பாட்டாளர்கள் இவ்விடயமாக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது.
– துறைநீலாவணை தங்கராஜன் (எஸ்.எல்.பி.எஸ்.- தரம் ஒன்று) -சமூகசெயற்பாட்டாளர்