தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் மட்டு.மாவட்ட செயலகம் 3ம் இடம்

இலங்கை தேசிய உற்பத்தி திறன் செயலகம் நடாத்திய 2017ம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் போட்டியில், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளது.

தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக கடந்த ஜனவரி மாதத்தில்  பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தேசிய உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்திருந்தது.
அதன்படி நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக விண்ணப்பித்த மாவட்ட செயலகம் 3ம் இடத்தினைப் பெறறுள்ளமைக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் புதுவருட தினமான நேற்று அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விழாவில், உற்பத்தித் திறன் எண்ணக்கருவை பின்பற்றி அதிக பயனைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், அரசதுறை மற்றும் உற்பத்திகள் மற்றும் சேவைகள் துறையினருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.