மேன்முறையீட்டு முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் நாளை பழைய பாடசாலைகளில் கடமையாற்றலாம்.

மேன்முறையீட்டு முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் நாளை பழைய பாடசாலைகளில் கடமையாற்றலாம்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும் மாகாணமட்ட மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்றசபை அமர்வுகள் முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும்வரை குறித்த ஆசிரியர்கள் அவரவர் பழையபாடசாலைகளிலே( தற்போது கடமையாற்றுகின்ற) ஒப்பமிட்டு கடமையாற்றமுடியுமென இன்று (01) செவ்வாய்க்கிழமை மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் தொடர்ச்சியாக 3தினங்களாக இம்மேன்முறையீட்டு இடமாற்றசபை நடைபெற்றுவருகிறது.

இவ்வாறு இருக்கையில் நாளையதினம்(2.1.2019) பாடசாலை ஆரம்பமாகின்றது என்பதால் மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்த சகல ஆசிரியர்களும் ,இன்னும் முடிவு கிடைக்காதபடியினால் தாங்கள் ஏற்கனவே கடமையாற்றிய பழைய பாடசாலைக்குச் செல்வதா? அல்லது கிடைத்த புதிய பாடசாலைக்குச் செல்வதா? என்று தெரியாமல் ஆசிரியர்கள் தடுமாறுவதாக மாகாணக்கல்விப்பணிப்பாளரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது நடைபெற்றுவரும் மேன்முறையீட்டு இடமாற்றசபை இன்னும் ஒரு நாளிலே முடிவுறவுள்ளது.அதன் முடிவுகளை அதாவது மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்ற முடிவை மிகவிரைவாக அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களிடம் அறிவிப்போம்.

அதன்பின்னர் அந்தந்த பாடசாலை அதிபருடாக குறித்த ஆசிரியர்களுக்கு அறிவிப்பார்கள். அனைத்தும் இவ்வாரத்துக்குள் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கின்றேன்.

அதுவரையும் அவர்கள் தத்தம் பழையபாடசாலைகளிலே( தற்போது கடமையாற்றிய) கடமையை மேற்கொள்ளலாம். உண்மையில் இவ்வாறு 14தினங்கள் கடமையாற்றலாம்.எனினும் நாம் இந்தவாரமுடிவிற்குள் அறிவிப்போம்.

இந்த முடிவைப்பார்த்து அந்தந்த வலயங்களில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர்செய்ய உள்ளக ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்வதனுடாக சமப்படுத்தும் அதிகாரத்தை கிழக்குமாகாண கல்விச்செயலாளர் முத்துபண்டா அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.