அமெரிக்கத் துறவியான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் இறையடிசேர்ந்தார்.

பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவரும் சிறந்த சமூக, சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் புதுவருட தினமான இன்று செவ்வாய்க்கிழமை தனது 94 வயதில் மட்டக்களப்பில் காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர் இன்றைய தினம் அதிகாலை இறையடி சேரந்ததாகவும், நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் 1948ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்து கடந்த 70 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான மற்றும் சமூகப்பணி மற்றும் கல்விப்பணியாற்றியவர்.

இலங்கைக்கு வந்த அருட்தந்தை மில்லர் ஆங்கில மொழிமூலம் புனித மிக்கேல் கல்லூரியில் வரலாறும் பௌதிகமும் கற்பிப்பதில் பணியை ஆரம்பித்தார்.

சமாதான சகவாழ்வு வேலைத்திட்டத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்த அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், மட்டக்களப்பில் 1980 களில் றொட்டறிக் கழகம், சமாதானக் குழு, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு செங்சிலுவைச் சங்கம் என்பவற்றை நிறுவுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர், 1990 யுத்த காலத்தில் அப்பாவியான மக்களை பாதுகாப்புப் படைகளிடமிருந்து மீட்பதற்கு படைகளுக்கு மிகவும் உதவியாக இருந்ததோடு காணாமல் போனவர்களின் விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்.

இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அறிவதற்காக வெளிநாட்டு இராஜ தந்திரிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அருட்தந்தையிடமிருந்து யுத்தகால அவலங்களை வெளிப்படுத்தியவர். 2002-2004 இல் நோர்வேஜிய அரசு செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நிறுவிய யுத்த நிறுத்த கண்காணிப்பக் குழுவிற்கு அரசு அருட்தந்தை மில்லரை நியமித்தது.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளராக மற்றும் ஆசிரியராக கடமையாற்றியதுடன், அதிபாராக 15 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பில் சர்வமத அமைப்பு மற்றும் சமாதான பேரவை உட்பட பல்வேறு சமூக சிவில் அமைப்புக்கள் என்பவற்றில் முக்கியஸ்தராக இருந்து, யுத்த காலத்தில் சிறந்த மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.