தாய்சேய் நலத்தில் கிழக்குமாகாணம் பின்நிலையில்

தாய்சேய் நலத்தில் கிழக்குமாகாணம் பின்நிலையில் உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.அருள்குமரன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை(30) மாலை நடைபெற்ற செயல்திறன் விருது வழங்கும் நிகழ்வில்; கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மாகாணப்பணிப்பாளர் அங்கு, தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தில் 6300 சுகாதார ஊழியர்கள் உள்ளனர். இவர்களைக்கொண்டு 17இலட்சம் மக்களுக்கு சேவையாற்றுக்கின்றோம். மக்களுக்கு இலவச சேவைகளை ஆற்றுவதற்காக பல வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வைத்தியசாலைகள் அனைத்தும் தமது சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றுள்ளும் மகிழடித்தீவு வைத்தியசாலை சிறந்தசேவையினை ஆற்றிவருகின்றமையினை எம்மால் அவதானிக்க முடிகின்றது. மாகாணத்தினால் வழங்கப்பட்ட வைத்திய பரிசோதனை உபகரணங்களை கொண்டு சிறந்த சேவையினை ஆற்றிவருகின்றமையினையும் இங்குள்ள புள்ளிவிபரங்கள் சுட்டிநிற்கின்றன.

கிழக்கு மாகாணம் தாய்சேய் நலத்தில் ஒப்பிட்டளவில் பின்நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் பின்நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழலிலும், தாய்சேய் நலத்தினைப் பேணும் வகையில், ஏனைய வைத்தியர்களின் உதவியுடன் தாய்சேய் நலம் தொடர்பில் இவ்வைத்தியசாலை சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறுமாதங்களாக கிழக்கு மாகாணத்தில் சிறந்தசேவையினை ஆற்றிவருகின்றோம். சிறப்பான சேவையை வழங்குவதற்கு நாங்கள் அனைவரும் குழுவாக இணைந்து செயற்படுகின்றோம். இதன்பயனாக முரண்பாடுகளை களைந்திருக்கின்றோம். 2019ம் ஆண்டிலும் பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளோம்.

மகிழடித்தீவு வைத்தியசாலை அமைந்துள்ள படுவான்கரைப்பிரதேசமானது, பாரம்பரியமான பிரதேசம், இங்குள்ள மக்கள் முயற்சியுடைவர்கள், இங்குசிறந்த மனிதவளங்கள் காணப்படுகின்றன. இவற்றினை பறைசாற்றுவதாக மகிழடித்தீவு வைத்தியசாலையின் செயற்பாடுகளும் உள்ளமை பாராட்டத்தக்கது என்றார்.