15,000 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது

கிழக்கு மாகாணத்தில், கடந்த 5 வருடங்களில் 15,000 போதைப்பொருள் விற்பனையாளர்களும் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் ஆனால், மாகாணத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரையான 5 வருடக் காலப் பகுதியில் கிழக்கு மாகாண மதுவரி உதவி ஆணையாளராகக் கடமைபுரிந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் கே.எம்.ஜி.பண்டாரவைப் பாராட்டும் வைபவம், மதுவரித் திணைக்கள மாவட்ட அதியட்சகர் எச்.எம்.டி.ஜெயவர்த்தன தலைமையில் மாவட்ட செயலாளர் சுற்றுலா விடுதியில் நடைபெற்றபோதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போதே, இடமாற்றம் பெறும் அதிகாரி, சமூகத்தலைவர்களாலும் மதுவரி அதிகாரிகளாலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.