(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அ.சுதர்சன் என்ற மாணவன் கணிதப்பிரிவில் 2ஏ, சீ சித்திகளையும் 25வது மாவட்ட நிலையையும் பெற்று பொறியியல்துறைக்கு தெரிவாகியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிகஸ்ட பிரதேசமான குழுவினமடு கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குறித்த மாணவன், அக்கிராமசேவையாளர் பிரிவில் உள்ள அதிகஸ்டப் பாடசாலையான கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் வரை கற்று சாதாரணதரத்தில் சிறந்து பெறுபேற்றினையும் பெற்றிருந்தார்.
குறித்த கிராமத்தில் முதன்முறையாக இம்மாணவனே பொறியியல்துறைக்கு தெரிவாகி வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன், இப்பிரதேசத்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கின்றார்.
கிராமத்து மாணவர்களும் கல்வியில் முன்னிலை வகிக்க முடியும். என்பதனை நிலைநாட்டுவதையே நோக்காக கொண்டு கற்றதாக கூறும் குறித்த மாணவன், தமது பிரதேச மாணவர்களது கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு இலவச வகுப்புக்களை நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் தமது பிரதேசத்திற்கு உதவி செய்வதிலும் பின்னிற்கப்போவதில்லை என்பதனையும் கூறினார்.
அன்றாடம் கூலிவேலை செய்து குடும்பத்தினை வழிநடத்தும் குடும்பத்தில் பிறந்த குறித்த மாணவன், கல்விகற்கும் வேளையில், பணவசதி மற்றும் போக்குவரத்து செய்வதிலும் இடர்பாடுகளை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். ஆனாபோதிலும் கற்கவேண்டும் என்ற எண்ணத்தின் பயனாகவும், பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவினாலும், ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் தான் எண்ணியதை நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டான்.