– படுவான் பாலகன் –
எம்மைப்பார்த்து பரிதாபம் சொல்லாதீர்கள் ஆதரவு தாருங்கள் என்ற ஓசையொன்று கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் அண்மையில் எழுந்ததாக மலரவனும், முருகையனும் பட்டிப்பளைச் சந்தியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அண்மையில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிலையில்தான், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும் உதய ஒளி மாற்றுத்திறனாளி அமைப்பினால் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் உரையாற்றுகின்ற போது, மாற்றுத்திறனாளிகளாக நாம் பலர் பிறக்கும் போது உருவாகிவரவில்லை. வாழும்போதே சந்தர்ப்பசூழல் எம்மை மாற்றுத்திறனாளிகளாக உருவாக்கியிருக்கின்றது. அதற்காக எம்மைப்பார்த்து பரிதாபம் சொல்லாது, ஆதரவு தாருங்கள் என்ற கருத்தினையும் முன்வைத்திருந்தாக கூறிய மலரவன் அக்கருத்தின் ஆழத்தினையும் முருகையனுக்கு விளக்க ஆரம்பித்தான்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 600க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. மாற்றுத்திறனாளிகள் என்போர் பிறக்கும் போதுமட்டும் உருவாக்கப்பட்டவர்கள் அல்லர். வாழும் போது சந்தர்ப்பசூழல்கள் மாற்றுத்திறனாளிகளாக பலரை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக கடந்த மூன்று தசாப்த யுத்தம் பலரை மாற்றுத்திறனாளிகளாக்கியிருக்கின்றது. அதேவேளை இயற்கை அனர்த்தம், எதிர்பாராத விபத்துக்கள், நோய்கள் என்பனவும் மாற்றுத்திறனாளிகளை உருவாக்கியுள்ளன. இவர்கள் அனைவருமே சமுகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவர்கள், அதேவேளை சமுக அந்தஸ்தும் உள்ளவர்கள். மற்றவர்களைவிட பலவிடயங்களில் சாதிப்பவர்களாகவும், பலதிறன்களை கொண்டவர்களாகவும் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால்தான் இவர்களுடைய தேவைகளை சர்வதேசமும் உணர்ந்து, மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டல் மற்றும் உள்வாங்கல் போன்றவற்றுடன் சமத்துவத்தினையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகின்றது.
பாடசாலைக்கல்வி தொடக்கம் வேலைத்தளம் வரை இவர்களுக்கு சமத்துவம் வழங்கப்படவேண்டும் என்ற கோட்பாடும் இலங்கைநாட்டிலும் உள்ளது. அதேவேளை நாட்டின் அபிவிருத்திசார் செயற்பாடுகளில் இவர்களது பங்கும் அளப்பரிதாக வேண்டும். அளப்பரிதாகியிருக்கின்றது என்பதும் தொடர்பேச்சுக்களாக உள்ளன. மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றவர்களும் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிறரின் வெறுப்புக்கு ஆளாகிவிடக்கூடாதென்பதில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். தாமும் பிறரைப்போன்று வாழ்க்கையிலும் சொந்த காலில் நிற்க வேண்டுமென நினைக்கின்றனர். ஆனாபோதும் நம்சார்சூழல் இடம்கொடுக்கவில்லை. இதற்கு பொருளாதார ரீதியில் நம் பிரதேசம் பின்நிலை வகிப்பதும் மிகமுக்கியகாரணமே. குறிப்பாக வாழ்க்கையின் ஒருநாள் பொழுதினை கழிப்பதில் அன்றாடம் சவால்களை எதிர்கொள்கின்றவர்களாக படுவான்கரைப்பகுதி மக்கள் உள்ளனர். இவ்வலையில் மாற்றுத்திறனாளிகளும் சிக்கியிருக்கின்றனர். இதற்கு நிரந்தர தொழில்வாய்ப்பின்மையும் முதலீடு இன்மையும் சிக்கலானதொன்றாகவே இருந்து வருகின்றது. இதனால்தான் ஆதரவுக்காக படுவான்கரைப்பிரதேசம் பலரையும் எதிர்பார்த்திருக்கின்றது.
வழிதெரியாமல் ஒருவர் தடுமாறுகின்ற போது, வழிதெரியாமல் தடுமாறுகின்றாரே! என பரிதாபப்படுகின்ற நிலையே பல இடமும் காணப்படுகின்றது. இதனால் பலர் பரிதாபவப்படுகின்றவர்களாவே இருக்கின்றனரே தவிர, வழியைச்சொல்லி ஆதரவுகொடுத்து வழியனுப்புகின்றவர்களாக இல்லை. என்ற கருத்தினை மலரவனும் கூற, முருகையனும் தொடர்ந்தான். உண்மையில் நாம் அன்றாடம் காண்கின்ற உண்மையும் இதுவே, ஒற்றைக்கால் இல்லாத ஒருவர் படியொன்றில் ஏறும் போது, சிரமங்களை எதிர்கொண்டு நிற்கையில், சிலர் அவரைப்பார்த்து ஏறமுடியாமல் தவிர்க்கின்றாரே என கவலையுறுகின்ற, பரிதாபம் கொள்ளுகின்ற தன்மையினையே அதிகம் காணமுடிகின்றது. அவரின் கையைப்பிடித்து, படியில் ஏற்றுவதற்கு முயல்வதில்லை. அவ்வாறில்லாமல் அவர் வீழ்ந்தபின் அவ்விடம் ஓடிச்செல்வதுதான் சமுகத்தில் இன்று அதிகம் நடந்தேறிவருகின்றது. இதனை மாற்றுத்திறனாளி அமைப்பின் உறுப்பினரும் நன்கு உணர்ந்திருக்கின்றார். இதன்காரணமாகத்தான் பரிதாபம் சொல்லாதீர், ஆதரவு தாரும் எனக்கேட்டிருக்கின்றார் என்றான் முருகையின்.
தட்டிக்கொடுப்பதைவிட தட்டிக்கழிப்பதிலே கரிசணை கொள்ளும் தற்போதைய சூழலில், மாற்றுத்திறனாளிகளாக நிற்கின்ற உறவுகளும், குடும்ப வாழ்க்கையில், சிரமமின்றி வாழ்வதற்கு அவர்களுக்கான சிறந்ததொரு ஆதரவினை கொடுப்பதற்கு முன்வரவேண்டும். அவர்களுக்கான சிறப்பான ஆதரவு அவர்கள் இன்னும் பலருக்கு ஆதரவு கொடுக்ககூடியதாக அமைய வேண்டும். பரிதாபவம், பரிவு மனதில் இருந்தாலும், செயற்பாட்டில் ஆதரவும், கைகொடுப்புமே ஒருவரை உயர்த்திச் செல்லும் என்று மலரவனும் கூறிய முடிய நேரம் செல்வதாக கூறிவிட்டு கொக்கட்டிச்சோலையை நோக்கி மலரவனும், பட்டிப்பளையை நோக்கி முருகையனும் சென்றனர்.