மாவட்டத்தில் உயிரோட்டமுள்ள பிரதேச செயலகமாக மண்முனை தென்மேற்கு –

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஊயிரோட்டமுள்ள பிரதேசசெயலகமாகவுள்ளது. வழங்கப்படுகின்ற திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துகின்ற பிரதேசசெயலகமாகவும் இது உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச பண்பாட்டு நிகழ்வும் இலக்கிய விழாவும் வெள்ளிக்கிழமை(28) கொக்கட்டிச்சோலை பண்பாடு மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கலைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பாதுகாக்கவேண்டியே உள்ளது. இப்பிரதேசத்திலேயே பண்பாட்டு கலைகள் பலவும் வருடாந்தம் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. கலைஞர்களுக்கு எம்மால் கொடுக்கக்கூடிய வெகுமதிகள் பாராட்டுக்களும், கௌரவிப்புக்களும் மாத்திரமே. அவ்வாறான வெகுமதிகளின் ஊடாக கலைஞர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும். அவ்வாய்ப்புக்கள் இப்பிரதேசத்து கலைஞர்களுக்கு கிடைத்திருக்கின்றது. கலைகளின் ஊடாகவே பல்வேறு விடயங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன. இப்பிரதேசத்திலேயே படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், நாட்டு வைத்தியர்கள், கல்விமான்கள், வீரவீராங்கணைகள், சிறந்த சிந்தனையாளர்கள், முயற்சியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற போது, இப்பிரதேசத்து மக்கள் அவர்களாகவே அபிவிருத்திகளை செய்துகொள்வர்.

கூத்துக்கலையில் ஆர்வமுள்ள பல செயற்பாட்டாளர்கள் இப்பிரதேசத்திலே உள்ளனர். இன்றும் வட்டக்களரியில் கூத்தினை ஆடி அரங்கேற்றி வருகின்றனர். கலைகள் எப்போதும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது. அம்மகிழ்ச்சினையை கொடுக்கின்ற பிரதேசமாக மட்டக்களப்பின் மேற்குகரை இருந்து வருகின்றது. இங்கு வாழ்கின்ற மக்கள் நிறைவான மனம் கொண்டவர்கள். இதனால் எப்போதும் வருகின்றபோதும், அனைவருக்கும் உணவளித்து அனுப்புகின்ற பண்பாடு இன்றும் இவர்களிடத்திலே காணப்படுகின்றது. கலையினையும் தொழில்துறையாக மாற்றுகின்ற போது, கலைஞர்களது வீட்டில் வறுமை கொள்ளாது. பல நாடுகளில் தமது நாட்டுக்கலைகளை சுற்றுலாவிற்கு வருகின்ற பயணிகளிடம் காண்பித்து அதன்மூலமாக வருமானத்தினை ஈட்டிக்கொள்கின்றனர். ஆனால் நமது மாவட்டத்தில் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதில்லை. என்றார்.