கொக்கட்டிச்சோலையில் பண்பாட்டு இலக்கிய விழா

கொக்கட்டிச்சோலையில் பண்பாட்டு இலக்கிய விழா
மண்முனை தென்மேற்கு பிரதேச பண்பாட்டு இலக்கிய விழா நேற்று(28) வெள்ளிக்கிழமை பிரதேசசெயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை பிரதேச பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கலந்து கொண்டிருந்தார்.

பிரதேச மட்டத்தில் மாணவர்கள், இளைஞர், யுவதிகள் மத்தியில் நடாத்தப்பட்ட பல போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் கூத்துக்கலைக்கு சிறந்த சேவையாற்றிக்கொண்டிருக்கும் மூன்று கலைஞர்களுக்கும், ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கும் யுவதியொருவருக்கும் இளங்கலைஞர் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச பண்பாட்டு பேரவை, பிரதேச பண்பாட்டு அதிகாரசபை, பிரதேசசெயலகம் இணைந்து இந்நிகழ்வினை நடாத்தினர்.

அரங்கிலே, நடனம், நாட்டார்பாடல், தேசிய ரீதியில் முதலிடத்தினைப்பெற்றுக்கொண்ட வேட்கை நாடகமும் ஆற்றுகை செய்யப்பட்டது.

சமுர்த்தி வங்கியினால், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கொடுப்பனவுகளும், மருத்துவச்செலவிற்காக மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவருக்கு ஒருதொகை பணமும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.