கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்  கூற்று  சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாகவுள்ளது. –இந்து சம்மேளனத் தலைவர் நாரா.டி.அருண்காந்த்

கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் ஆசிரியர் வெற்றிடங்கள் வெளிமாவட்டத்தவரைக் கொண்டு நிரப்பப்படக்கூடாதென வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை உண்மையிலேயே சாத்தான் வேதம் ஓதுவதாகவிருப்பதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தள்ளார்.
கிழக்கு மாகாண் முன்னால் முதலமைச்சர்  நசீர் அஹமட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்து இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் ஊடக அறிக்கை ஒன்றை இன்று புதன்கிழமை (26) விடுத்துள்ளார் .
கடந்த இருபத்திரண்டாம் திகதி தமிழ் பத்திரிகைகளில் கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் தொடர்பில் ‘ நஸீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக  கடமையாற்றிய போது  கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்களுக்காக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்.
அதன்படி ஐயாயிரத்து நாநூறுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்க தான் நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் அது நிறைவேறாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையில் தொடர்வதாகவும்  எனவே தற்போது கோரப்பட்டிருக்கும் விண்ணப்பங்களினூடாக சிங்கள பட்டதாரிகளும் உள்வாங்கப்படவிருப்பதால் அதனை தான் எதிர்ப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் கிழக்கு மாகாண சிங்களப் பாடசாலைகளுக்கு சிங்களப்பட்டதாரிகள் நியமிக்கப்படக்கூடாது என்று கூறும் தாங்கள் ஒருவிடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும். அதாவது தங்களின் தேவையற்ற அரசியல் தலையீடு காரணமாகவும் தமிழ் இளைஞர் யுவதிகளை கணிசமான எண்ணிக்கையில் வெட்டியகற்றிய இனவாத நடவடிக்கை காரணமாகவே ஆசிரியர் நியமனங்கள் கைகூடாமல் நழுவிச்சென்றது.
ஆசிரியர் கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவுசெய்து  வெளியேறும் கிழக்குமாகாண இளைஞர் யுவதிகளுக்கு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் வெற்றிடம் இல்லையெனக் கூறி ஊவா போன்ற மாகாணங்களுக்கு பந்தாடி அனுப்பிவிட்டு கிழக்குமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தேவைக்கு அதிகமாகவே முஸ்லிம் ஆசிரியர்களை நியமித்து தன்னை  ஒரு இனவாதியாக முத்திரைக்குத்திக்கொண்டதை கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர்களும் கல்விச்சமூகமும் மறந்திருக்கமாட்டார்கள்.
இது தவிர தங்களது மாகாண சபையின் ஆட்சிகாலத்தின் இறுதிகாலத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடாத்தி பல நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அந்தபட்டியலில் நான்கில் ஒரு பங்கினர் கூட தமிழ் ஆசிரியர்கள் கிடையாது.
இப்படியாக கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே தமிழர்களுக்கு சமவாய்ப்பைக் கொடுக்கத்தவறிய தாங்கள் சிங்கள பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றுள்ளது.
இவைகளுக்கப்பால் கல்வித்துறையில்  தாக்கம் செலுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தாங்கள் தற்போது முதலமைச்சரோ மாகாண கல்வி அமைச்சரோ கிடையாது. வெறுமனே வரவிருக்கும் மாகாணசபைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அறிக்கைவிடுவதை தவிர்த்து தாங்கள் சார்ந்த மக்களுக்கு காத்திரமான சேவைகளைச்செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மாகாணம் முழுவதிற்குமான நியமனங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் அம்மாகானத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உருப்பினர்களுடனும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்களுடனும் தமிழ் புத்திஜீவிகளிடமும் கலந்துரையாடி முடிவெடுக்கும் ஜனநாயகப் பண்பை பின்பற்றுவதை நஸீர் அஹமட் அவர்கள் பழகிக்கொள்ளவேண்டும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.