மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதேச மக்களின் பிரச்சினைகளை நடமாடும் சேவை ஒன்றினை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அம் மக்களிடம் தெரிவித்தார்.
ரிதிதென்னை கிராமத்து விவசாயிகளுக்கான தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட அலுவலகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சிச் செயலமர்வில் கலந்து கொண்டு மக்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த வேளையிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இச் செயலமர்வு ரிதிதென்ன பாடசாலை மண்டபத்தில் தேசிய உரச் செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தலைமையில் நடைபெற்றது.
இதில், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முசம்மில், விவசாயப் போதனாசிரியர் எம்.எம்.ஜமால்தீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதன் கலந்துரையாடலின் போது, தங்களது கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை, வீதிப்பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவற்றினை அரசாங்க அதிபர் தீர்த்துத்தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
ஆத்துடன் விவசாய நடவடிக்கையில் நீர்த்தட்டுப்பாட்டினைத் தவிர்க்கும் வகையில் விவசாயக்கிணறுகள் அமைத்துத் தரும்படியும் கேட்டுக் கொண்டனர். அதே நேரம் சுகாதார வைத்திய வசதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும் ரிதிதென்ன மக்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.
இவற்றுக்குப் பதிலழித்த அரசாங்க அதிபர் வரைவில் நடமாடும் சேவையொன்றின் மூலம் அக் கிராமத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய உரச் செயலகத்தின் ஏற்பாட்டில் செயலகத்தின் செயற்பாடுகள், உரப்பாவனையின் முக்கியத்துவங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வாகரை கமநல சேவைகள நிலையத்துக்குட்பட்ட ரிதிதென்ன விவசாயிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு ரிதிதென்னவில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தலைமையில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையில், உரச் சட்டமூலம், விவசாயக் காப்புறுதியின் முக்கியத்துவம், சேதன திரவ பசளையின் பயன்பாடு, சேதனப் பசளையின் முக்கியத்துவம், தேசிய உரச் செயலகத்தின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புகள் குறித்து துறைசார் வல்லுனர்களால் விளக்கமளிப்புகள் நடைபெற்றன.
இப் பயிற்சிப்பட்டறையின் போது பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், பங்கு கெண்டவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கான இவ்வாறான செயலமர்வுகள் எதிர்வரும் வாரங்களில் மாவட்டத்தின் ஏனைய பிரதேச கமநல சேவைகள் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்தார்.