மிகவும் பழமையான தமிழ் கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் போர் முடிவடைந்த பின்னர் மீள்குடியேறிய சகோதர இனத்தவர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித் திட்டம் எதனையும் பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என இலங்கை அரச அதிகாரிகளினால் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கோணேசன் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் வயல்காணிக்கு மேலதிகமாக வைத்திருப்பவர்களிடம் சுவீகரிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், மக்கள் குடியிருக்கும் காணிகளுக்கு உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக வாகரை பிரதேச செயலாளரிடம் பலதடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அதற்கும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை என்றார்.
இதேவேளை, தமிழ் மக்களின் பாரம்பரியக் கிராமங்களான கறுவாச்சோலை, கெவிளியாமடு, புளுக்குணாவ, கச்சக்கொடிசுவாமிமலை போன்ற கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் அங்கு சிங்களவர்கள் குடியேறி வருவதாக ஏலவே முறைப்பாடுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி