மட்டக்களப்பில் மிளிரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை

களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை கடந்த எட்டு வருடங்களாக எந்தவொரு ஊடகங்களினாலும் விமர்சிக்கப்படவில்லை என்பதனை நான் பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன் அவர்கள் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்திசாலையின் வருட இறுதிக்கான ஒன்று கூடல் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் தலைமையில் வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், வர்த்தக சங்கத்தினர்,வைத்தியசாலை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் தலைமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பினை பொறுத்தளவில் மட்டக்களப்பின் வடக்கு பகுதி வாழைச்சேனை வைத்தியாலையாலும் மட்டக்களப்ப தெற்கு பகுதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையாலும் அளப்பெரிய சுகாதார சேவையினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு ஆற்றி வருகின்றது. வைத்திய சேவைகள் எனும் பொழுது அது இடையறாத சேவையாகும். இது மிகவும் சிரமமாக இருந்தாலும் இந்த சேவையினை மிகவும் சிறப்பாக செய்து சிறப்பு காண்பதுதான் இந்த சுகாதார பணியாகும் இந்த வைத்தியசாலை கடந்த பல காலங்களை தவண்டு எழும்பி தற்பொழுது நடப்பதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. அதாவது இன்னும் ஓரிரு வருடங்களில் இந்த வைத்தியசாலையானது முழுமையான சுகாதார சேவையை வழங்குகின்ற வைத்தியசாலையாக மிளிரும் என்பதில்  எந்தவித ஐயமும் இல்லை
ஊடகங்களை திறந்தால் எப்பொழுதும் வைத்தியசாலைகளைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை காணாது அந்த ஊடகங்கள் அமைவதில்லை எங்கயோ ஏதாவது ஒரு வழியில் வைத்தியசாலைகளின் பிரச்சினைகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கும். இந்த களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையை கடந்த எட்டு வருடங்களாக எந்தவொரு ஊடகங்களினாலும் விமர்சிக்கப்படவில்லை என்பதனை நான் பெருமையாக  கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் எமது சக உத்தியோகத்தர்களின் வழங்கப்படும் சிறப்பான சேவையும், பங்களிப்பே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த வருடத்தில் இந்த வைத்தியசாலை என்னசெய்துள்ளது எவ்வாறான சேவையினை மக்களுக்கு ஆற்றியுள்ளது என்பதனை நான் அனைவருக்கு கூறுவது எனது கடமையாகும். வெளி நோயாளர் பிரிவினூடாக சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 172421,  வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வெளியேறிய நோயாளிகளின் என்னிக்கை 16786, இந்த வைத்தியசாலையில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 142000, நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை 43,  இறப்புக்களின் எண்ணிக்கை 20, விசர்நாய்கடி மூலம் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 3875, தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 420, பல்நோய்களுக்கா சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 10850, கிளினிக மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 430100, இந்த வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2755, எமது வைத்தியசாலையில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற சந்திரசிச்சையின் எண்ணிக்கை 540 ஆகும் இவ்வாறாக எமது வைத்தியசாலை இந்த 2018 ஆம் ஆண்டில் மக்களுக்காக தனது சேவையினை ஆற்றியுள்ளது என்பதனை கூறிக்கொள்வதில் மிகவும் சந்தோசம் அடைக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்