காணி விடுவிப்பு திருகோணமலை

கதிரவன் திருகோணமலை

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகள், அரச கட்டடங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பாதுகாப்பு படையினரை முழுமையாக வெளியேற்றுவதாக இலங்கையின் மேன்மை தங்கிய ஜனாதிபதி தெரிவித்திருந்த போதும் கிழக்கு மாகாணத்தில் ஒரு சில தனியார் காணிகள், ஒரு சில பாடசாலைகள், அரச கட்டடங்கள், பொது ஸ்தாபனங்கள் போன்றவற்றிலிருந்து இன்றும் பாதுகாப்பு படையினர் முழுமையாக வெளியேறவில்லை. பாதுகாப்பு படையினர் யுத்த காலங்களில் கையகப்படுத்திய தனியார் காணிகளிலும், அரச கட்டடங்கள், பொது ஸ்தாபனங்களில் அக் காலத்தில் அவர்கள் வழிபாட்டிற்காக நிறுவப்பட்ட புத்த விகாரைகள், அரச மரங்கள், விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளில் தொடர்ந்தும் இருப்பதால் அக் காணி உரிமையாளர்கள் அக் காணிகளில் மீள் புனருத்தாபனம் மேற்கொள்ளும் போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே பாதுகாப்பு படையினர் கையகப்படுத்திய நிலங்களை, பிரதேசங்களை விடுவிக்கும் போது பாதுகாப்பு படையினர் கையகப்படுத்திய போது இருந்தவாறு காணிகளை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு அர்;த்தமுள்ளதாகவிருக்கும். இவ்வாறு திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முந்நாள் உறுப்பினர் சி.நந்தகுமார் (நந்தன் மாஸ்ரர்) 0766692151 விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் வசமுள்ள காணிகள் விடுவி;ப்பு சம்பந்தமாக அவரிடம் கருத்து வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். நகராட்சி மன்ற முந்நாள் உறுப்பினர் சி.நந்தகுமார் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு படையினர் காணிகள், கட்டடங்களை கையகப்படுத்தும் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளில் உள்ள கட்டடங்களிற்கான சேதத்திற்கான தற்போதைய பெறுமதியை கணக்கிட்டு நஷ்டஈடு வழங்க நடவடிக்கையெடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் காணிகள் கையகப்படுத்தலால் வீடுகளை இழந்தவர்களிற்கும் முழுமையான வீடுகளை நிர்மாணிக்க நஷ்டஈடு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதியை கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.