மட்டு மாவட்ட செயலக ஒருங்கிணைப்பில் கிளிநொச்சி, முல்லைதீவு மக்களுக்கான வெள்ள நிவாரண சேகரிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப்பணி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் , மட்டு மாநகர சபை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இன்று மாலை முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் அதில் அனைத்து மக்களும் ஒத்துழைப்புடன் இணைந்து கொள்ளவேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.
இன்று பகல் மாவட்ட செயலகதத்தில் நடைபெற்ற வெள்ள நிவாரணச் சேகரிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,
இன்று 24ஆம் திகதி முதல் 27ஆம்திகதி வரையில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு 28ஆம் திகதி குறித்த மாவட்டங்களில் கொண்டு சேர்க்கப்படும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொது மக்களில் அனேமானவர்கள் உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள், பொது அமைப்புகளும் தயாராக இருக்கிறார்கள். பொது மக்கள் இது ஒரு அவசரமான காரியம் என்பதனை உணர்ந்து நிவாரணங்களை வழங்கி அம் மக்களின் துன்பகரமான நிகழ்வில் பங்குபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் கிடைக்கப்பெறும் பொருள்கள் உரிய இடத்திற்குச் சென்று சேர்வதில் முழுப் பொறுப்பினையும் மாவட்ட செயலகமும் மாநகர சபையும் பொறுப்பேற்றிருக்கிறது.
 பிரதானமாக மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிவாரண சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 பிரதேச செயலகங்களிலும், பிரதேச சபைகளிலும் பொது மக்கள் நிவாரணங்களைக் கையளிக்க முடியும். வர்த்தகப்பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றன. ரோட்டரி கழகமும் இது தொடர்பில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிவாரணச் செயற்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு வேறு ஆட்கள் யாரும் இந்த விடயத்தில் உள்நுழையாத வகையில் இந்த வேலைத்திட்டம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரணவணபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, அனர்த்து முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம். றியாஸ், சுகாதார வைத்திய அதிகாரி, சிவில் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுமு; கலந்து கொண்டிருந்தனர்.