நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த கொள்வனவு செய்கிறார் – சிறிநேசன்

தனது ஆட்சியைக் காப்பாற்ற பதவிகளையும், பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கொள்வனவு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அத்தோடு தனது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்குமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனினால் முன்மொழியப்பட்ட, மட்டக்களப்பு ஐயங்கேணி பாடசாலை வீதி செப்பனிடும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்மை, பல யுவதிகள் விதவையாக்கப்பட்டமை போன்ற செற்பாடுகள் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே இடம்பெற்றன. அவரை நாங்கள் எவ்வாறு ஆதரிப்பது?

சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றாமல், ஜனநாயக ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் அவருக்கு ஆதரவு வழங்கியிருப்போம். எமக்கு பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றதும் எல்லாவற்றையும் வென்றுவிட்டோம் என்ற இறுமாப்போடு நடந்துகொண்டதன் காரணமாக அவரை நம்பமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்தவரை பணத்துக்காகவோ பதவிகளுக்காகவோ அடிபணியமாட்டார்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றாக ஜனநாயகத்தின் பக்கம் நின்றோம் ஆனால் ஒருவர் மாத்திரம் தவறிவிட்டார் அது அவரது பக்கமாக சிந்திக்க வேண்டிய விடயம்.

வடக்கு கிழக்கு மாணங்களில் அபிவிருத்தி என்பதை சிறிதளவும் அனுபவிக்காத பல பிரதேசங்கள் காணப்படுகின்றன. எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதலான முக்கியத்துவம் வழங்க வேண்டும்“என்றும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.