மட்டக்களப்பில் மரணவீட்டில் சூதாட்டம் முச்சக்கரவண்டி தீக்கிரை

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மரண வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக
ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்று எரிக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு எட்டு 8.30 மணியளவில் மட்டக்களப்பு-கல்லடியில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரண வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றுக்கும் அங்கிருந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவர் மீது பத்துக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து குறித்த நபரின் முச்சக்கர வண்டியையும் இழுத்துச்சென்று வீதியில் போட்டு தீயீட்டு எரித்துள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (Mn)