த.தே.கூட்டமைப்பு அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ளதா?

தற்போதைய பாராளுமன்றத்தில் த.தே.கூ எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தாலும், ஆளுங்கட்சியை
தனக்கு ஏற்றவாறு, தனது தேவைகளை நிறைவேற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கும் சக்தி பெற்றுள்ளது. இம் முறை அமைச்சரவை நியமனத்தின் போது த.தே.கூ அமைச்சுப் பதவியை பெற்றுள்ளது என கூறினால் ஏற்பீர்களா? பெற்றுள்ளது என்பதே மறைமுக உண்மை.

இதனை தற்போதைய அமைச்சரவை நியமனத்தை உற்று அவதானிப்பதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். இம் முறை பிரதமர் ரணில் தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் கையில் எடுத்துள்ளார்.
பொதுவாக பிரதமரொருவர் பொருளாதாரம், கொள்கை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களை ஏற்பது வழமை. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதும், அவசியமானதும் கூட. ஒரு நாட்டின் பிரதமர், ஒரு குறித்த மாகாணத்தின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய அமைச்சை (வடக்கு மாகாண அபிவிருத்தி ) கையில் எடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? ஏனைய மாகாணங்களின் அபிவிருத்தி, அவருக்கு அவசியமில்லையா? யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற விசேட காரணம் வடக்குக்கு இருந்தாலும், அதே விசேட காரணம் கிழக்குக்கும் உள்ளதல்லவா? இவர் பிரதமர் என்பதை விட, இன்றைய அரசின் மறைமுக தலைவர். இவர் ஒரு மாகாணத்தை முன்னிலைப்படுத்துவதை ஒரு போதும் ஏற்க இயலாது.
அது மாத்திரமல்ல, பிரதமர் ரணில் மீள்குடியேற்ற அமைச்சையும் தன் வசம் வைத்துள்ளார். இது ஒரு சமூகத்தின் கட்டாய தேவை என்பதால் விமர்சிக்க இயலாதென்றாலும், இதனை ஒரு அமைச்சரிடம் பாரம் கொடுத்து செய்திருக்க முடியும். அவ்வாறே இதுவரை காலமும் செய்தும் வந்தார்கள். இவ்விரு அமைச்சும் த.தே.கூவின் இருப்புடனும், தேவையுடனும் சம்பந்தப்பட்டவைகள். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு விடயங்களானது த.தே.கூவை விடுத்து, வேறு யாராவது கைக்கு செல்வது த.தே.கூவின் இருப்பை கேள்விக்குட்படுத்தும்.
எனவே, இவற்றை நன்கு சிந்தித்தால், அமைச்சரவை நியமனத்தின் போது த.தே.கூவின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுள்ளார் என்பது துல்லியமானது. த.தே.கூ, தனது தேவைகளை அவரினூடாக நிறைவேற்றிக்கொள்ளப் போகிறது. த.தே.கூவானது நேரடியாக அமைச்சுக்களை பெறாது போனாலும், மறைமுகமாக பிரதமரினூடாக பெற்றுள்ளது என்பதே உண்மை. பிரதமரே நேரடியாக வடக்கின் அபிவிருத்தியை கையில் எடுத்துள்ளதால், இனி அவர்கள் காட்டில் அடை மழை தான். எப்படியோ, தமிழ் மக்கள் வேறு இனத்தை பாதிக்காத வகையில், தங்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொண்டால் மகிழ்ச்சியே!
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.