– படுவான் பாலகன் –
பத்து வருடங்களுக்கு முன்பு யுத்தமிருந்தாலும், இயற்கை வளங்கள் சுரண்டப்படவில்லை. இப்போது, லொறி லொறியாக போகுது, சட்டவிரோதமான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. எங்க போய் முடியப்போகுதென்றே தெரியாது? என மணற்பிட்டி சந்தியில் நின்று தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி நின்றார் நல்லதம்பி.
மூன்று தசாப்த யுத்தத்தினையும் கண்ணுற்று, அதற்கு முன்னமும் நான்கு தசாப்தகாலங்களாக வாழ்ந்து இன்றும் கம்பீரமாக, பிள்ளை, பேரப்பிள்ளை, பேரப்பிள்ளையின் பிள்ளை என கண்டு நிமிர்ந்து நிற்பவர்தான் நல்லதம்பி. நமது பகுதியில் உள்ளவை நமக்கு பயன்படவேண்டும். நமக்கு பயன்பட்டு எஞ்சினால்தான் பிறபகுதிக்கு கொடுக்க வேண்டும். என்பதில் உறுதிகொண்டவர். எப்போதும் மரங்களை வெட்டுவதையும், கனியவளங்களை அழிப்பதையும் விரும்பாதவர். லொறி லொறியாக போகின்றதே! வேகமாக ஓடுகின்றார்களே! வீதியும் உடையுதே! நம்மட சனமும் அதிக பணத்தினை கொடுத்து வாங்குகின்றனரே! சட்டவிரோத கசிப்பு உற்பத்தியும் குறையுதில்லையே! இதை கேட்பார் யாருமில்லையா? என்று, எப்போதும், இவர் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர்களிடம், கூறிகூறி அவரது ஆதங்கத்தினை வெளிப்படுத்துவதே இவரின் திருப்தியும் கூட.
படுவான்கரைப்பகுதியில் காடுகளும், மலைகளும், வயல்களும், ஆறுகளும், ஓடைகளும், குளங்களும் அமைந்திருக்கின்றன. இவை இறைவன் கொடுத்த இயற்கை கொடைகள். அவற்றினை பயன்படுத்தி நாம் முன்னேறுவதுடன், அவற்றினையும் பாதுகாக்க வேண்டியதும் நமது தலையாய கடமையாகின்றது. நாம் அனுபவித்துவிட்டால் போதும், என்ற சிந்தனையில் வாழ்ந்தால் நமது எதிர்கால சந்ததிகள் பயன்படுத்துவதற்கு ஒன்றுமே இராது என்பதே நிதர்சனம். அதேவேளை இயற்கை சமனிலைகளை பேணாவிட்டால் இயற்கை கொடுக்கும் அழிவுகளையும் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதே நல்லதம்பியின் உள்ளக்குமுறுலாகின்றது.
லொறி லொறியாக போகின்றதே! என்று நல்லதம்பி கூறிய வசனம், அவர் நாக்கில் மட்டுமிருந்து வருகைதந்தல்ல. ஒரு தசாப்த காலமாக அடி மனதில் பதியப்பட்டதும், நீண்ட ஆதங்கத்துடனும், யாருமே இதுபற்றி நல்தீர்வு கூறுகின்றார்களேயில்லை என்ற விரக்தியிலும் கூறிய வசனமாக அமைந்திருந்தது. படுவான்கரைப்பகுதியில் ஆற்றுமணல் ஆங்காங்கு ஆற்றை, வயல்களை அண்டிய பகுதியில் காணப்படுகின்றது. அதேபோன்று நிரப்புமணல்களும் மேடுகளில் காணப்படுகின்றன. இவ்வாறான மணல்கள்தான் லொறி, லொறியாக ஏற்றிச் செல்லப்படுவதாக நல்லதம்பி கூறுகின்றார். பிரதேசத்து தேவைக்கு அதிகமாக மண்ணிருந்தால் அவை வேறு பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு இல்லாத நிலையில் வேறுபிரதேசத்திற்கு ஏற்றிச்செல்வதை எவ்வாறு ஏற்பது? அதேவேளை படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள் பணத்தினை சம்பாதிப்பதே போராட்டமானது. இந்நிலையில் தற்போதைய பொருட்களின் விலைவாசியில் வீடுகள் அமைப்பதென்பதும் பெரிதும் சிரமமானதே. அதேவேளை குறைவான பணத்தினை செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய மண்ணைக்கூட அதிக விலை கொடுத்து வாங்குவதென்பதும் மிகமிக வேதனையும் கூட. ஆற்றுமணல், நிரப்புமணல் ஏற்றுவதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்குகின்றது. அரசாங்கம் மணல்ஏற்ற அனுமதி வழங்கிய இடங்களில் மட்டும்தான் மண்அகழப்படுகின்றதா?, அரசாங்கம் வழங்கும் அனுமதியளவில் மட்டும்தான் மண் ஏற்றப்படுகின்றதா? என்ற விடயங்கள் பற்றிய தெளிவு நல்லதம்பியை போன்ற பலருக்கும் தெரிந்ததொன்றே. ஆனாலும் ஆதங்கத்தினை பேசமட்டும்தான் முடியும் என்பது நல்லதம்பியின் கருத்தாகின்றது. ஏன்னெனில் பல கூட்டங்களில் பேசியும் பலனில்லையென்பதே அவரின் பதிலாகின்றது.
மண்ணேற்றி செல்லும் லொறிகள் இரும்பிலானவை. இதனால் லொறி விபத்தில் சிக்கினாலும் அதில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படுவது மிகக்குறைவு ஆனால் இதில் யாரும் அகப்பட்டால் அவர்களின் உயிர் இருக்கும் என்பது சந்தேகமே. இதனால்தான், வேகமாக, லொறி சாரதிகள் மண்ணையேற்றி கொண்டு ஓடுகின்றனரோ? காவல்துறையினர் பிடித்துவிடுவார்கள் என்பதற்காக அஞ்சி ஓடுகின்றனரோ? கூடுதலான மண்ணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ஓடுகின்றனரோ? என்று தெரியவில்லை. வீதியில் நாம் நின்றாலோ, சிறுவாகனங்களில் சென்றோலோ எம்மை தள்ளிவிடுவது போன்று உள்ளது. இதனால் வீதிக்கு செல்வதற்கே அச்சமாக உள்ளதாக கூறுகின்றார் நல்லதம்பி. வீதிகளும் லொறியின் பாரத்திற்கும், வேகத்திற்கும் ஈடுகொடுக்காமல் அடிக்கடி உடைவதும் இயல்பாகிவிட்டது. இதனால் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் சிரமத்தினை எதிர்கொண்டும் வருகின்றனர்.
பத்துவருடங்களுக்கு முன்பிருந்த வாய்க்கால்கள் ஆறாகவும், ஆறுகளின் அணைக்கட்டு ஓரங்கள் உடைக்கப்பட்டு வருவதும் மண்அகழ்வின் மூலம் நடைபெறும் சம்பவங்களே. இதனால் பாதிக்கப்படுவதும் இப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகளும், மக்களுமே. நான்காயிரத்திற்கு பெறக்கூடிய மண்ணை நாற்பதினாயிரம் கொடுத்த வாங்கவேண்டியவர்களாக படுவான்கரை மக்கள் உள்ள நிலையிலும், இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகவும் படுவான்கரைப்பகுதி மக்கள் உள்ளனர், இவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க கூடிய வழிவகைகளை மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டுமென்பதும் நல்லதம்பி போன்றவர்களின் கோரிக்கையாகும்.