தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன்.
2015 ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015 இல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதிகூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் என்னை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டிருந்தார். அந்த தீர்ப்பினை சபாநாயகர் வழங்கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நேற்றைய தினம் டிசம்பர் 18 ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று சபாநாயகர் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவித்திருந்தார்.
இரண்டுமுறை மீளுறுதி செய்து எதிர்க்கட்சி தலைவராக நியமித்த என்னை பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பினை சபாநாயகர் செய்ததுமன்றி, இந்த செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது. மேலும் என்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் சபாநாயகரிற்கு பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியினை இது தோற்றுவிக்கின்றது.
பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியைவிட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுள்ளதனை கேள்விக்குட்படுத்த முடியாது. பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டீர்கள்.
இதற்கு காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒரு சாரார் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள்.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்த பின்னணியில் தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பாராளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி பாராளுமன்றில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதனை நடைமுறைப்படுத்தி என்னை எதிர்க்கட்சி தலைவராக இரண்டுமுறை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. எமது அரசியல் யாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உயர் மட்டதில் நீதித்துறையினால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன.
இந்த பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் தீர்மானமொன்றினை வழங்கியிருக்கின்றீர்கள். நீதிமன்ற தீர்ப்பிற்கமைய கடந்த 16 ஆம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை.
நேற்றைய தினம் 18 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரசாங்க தரப்பில் அமர்ந்து கொண்டனர். அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்த பின்னணியில் அவசரமாக இன்னொமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பினை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்ற சாட்டும் உள்ளது.
சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர் அறிவித்த அந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசியலமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.
மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசியலமைப்பினை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
பிளவுபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையினை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள்.
இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.
முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
virakesari