ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் எனச்சொன்னது எனது தனிப்பட்ட கருத்து

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்தேன்.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ இல்லையென்றும் அத்தகைய அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே உரித்துடையது என்பதை நினைவுகூறுகின்றேன்.

அத்துடன் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தெரிவித்தாலும் வாக்கெடுப்பின்போது அக்கருத்திற்கு பெரும்பான்மை கிடைத்ததாலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளிக்கின்ற தலைவர் என்றவகையில் தான் அந்த முடிவுக்கு உடன்பட்டேன்.

பாராளுமன்றத்தை கலைத்தல், ஒத்திவைத்தல், பிரதமரை நீக்குதல், புதிய பிரதமரை நியமித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எடுக்கவில்லை. நாட்டின் உயர் பதவியில் இருக்கும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே தான் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணம் தாய் நாட்டின் நன்மை கருதி மிக உன்னத எண்ணத்தினால் மேற்கொள்ள்பட்டது என்றும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் எவ்வித எண்ணமும் தனக்கு இருக்கவில்லை.

நாட்டில் ஏற்பட்டிருந்த சிக்கலான அரசியல் நிலைமைகளை தீர்த்துக்கொள்வதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்று தான் நம்பியதாகவும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 155 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகளின் மூலம் ஏற்படும் முடிவை நாடும் உலகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் 155 இலட்சம் வாக்காளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் வர்த்தமானியை வெளியிட்டோம்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சுயேட்சை ஆணைக்குழுவை நிறுவக்கூடியது சிறந்த அம்சமாக அமைந்தாலும் அதன் மறுபுறம் பாரிய அரசியல் சீர்குலைவு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி ஊழலின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் அந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள தேவையான இலஞ்ச ஆணைக்குழுவின் குறித்த சுற்றுநிரூபத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பாராளுமன்றத்தை கால வரையின்றி ஒத்திவைத்தல். தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அமைச்சரவைகளை பிரிக்கும்போது அறிவியல் அடிப்படையை பின்பற்றாமை, மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மற்றும் அதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தாமை மற்றும் பிக்கு சமூகத்தை இழக்கும் நிலையை தோற்றுவித்தல், இராணுவ வீரர்களை சிறைப்படுத்தல் போன்ற தொலைநோக்கற்ற பல செயற்பாடுகளை கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டு வந்ததாக தான் மனவருத்தத்துடன் காலங்கழித்ததாகவும் அண்மையில் மேற்கொண்ட அரசியல் முடிவுகளுக்கு அவ்வாறான நிலைமைகளே தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும் யார் எவ்வகையான அறிக்கைகளை வெளியிட்டாலும் கடந்த சில வாரங்களாக தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவுகள். தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக கருத்துத் தெரிவிக்கும் நபர்கள், தன்னை சிறையில் அடைத்தாலும் உன்னத எண்ணத்தினால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன்னால் எடுக்கப்பட்ட சரியான முடிவுகள் கல்லில் செதுக்கிய எழுத்துக்களாக வரலாற்றில் பொறிக்கப்படும்.

கடாபியை போன்று தன்னையும் இழுத்து சென்று கொலை செய்ய வேண்டும் என்று அண்மைக் காலங்களில் சில பேச்சாளர்கள் தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், ஜே.ஆர்.ஜெயவர்தன காலம் முதல் அதன் பின் ஆட்சியமைத்த எந்தவொரு தலைவருக்கும் அவ்வாறான சொற்பிரயோகங்களை எவரும் முன்வைத்ததில்லை என்றும் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்தால் முகங்கொடுக்க நேரும் துர்பாக்கிய சம்பவங்களை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் இன்று தனக்கு அவ்வாறான சொற்பிரயோகங்கள் முன்வைக்கப்படுவதற்கான காரணம் தான் நாட்டில் உருவாக்கிய சுதந்திரமும் ஜனநாயகமும் என்று நினைவுகூர்ந்தார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்களுடன் பிரச்சினைகளின்றி நாட்டின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தனது குறிக்கோள் என்றும் சிக்கல்களை தோற்றுவிப்பதால் நாடு பின்னடைவை எதிர்நோக்கும் என்றும், எதிர்கால நாட்டுக்கு ஊழலற்ற பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் தெரிவித்தார்.

தோல்வியடைந்த கண்ணெதிரே அழிக்கப்பட்ட அரசியல் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு நாட்டை நேசிக்கும் கலாசாரத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் மரியாதை அளிக்கும் அரசியல் பொறிமுறையொன்றின் ஊடாகவேயாகும் எனவும்தெரிவித்துள்ளார்.(MW)