திருமலை வாழையூற்றுப்பகுதியில் காணி உரிமையாளர்களுக்கு மிரட்டல்

 

திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழையூற்றுப்பகுதியில் சிங்கள மக்களுக்கு காணி வழங்ககோரி அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பலர் நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் தலைமையில் வாழையூற்று சிங்கள வித்தியாலயத்தில் கடந்த செவ்வாயன்று காலை நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையே நிராகரிக்கப்பட்டுள்ளது. வாழையூற்றில் வாழும் தமிழ் முஸ்லீம்மக்களால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்துள்ளனர். இதன்போது வாழையூற்றில் உள்ள சில குறிப்பிட்ட காணிகள் குறிப்பிடப்பட்டு தமக்கு காணி வழங்கப்படவேண்டும் என 17பேருக்கும் அதிகமான சிங்கள மக்கள் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவாக மாகாண காணி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக வாழையூற்றில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் 17பேருக்கு அழைப்பு கடிதம் மூலம் விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள்  அனைவரும் சட்டரீதியான ஆவணங்களைக்கொண்டிருப்பவர்களாகும்

இவ்வழைப்பை குச்சவெளிப் பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட தமிழ் முஸ்லீம் மக்களுக்கு அனுப்பியிருந்தார்.அக்கடிதங்களில் கிழக்கு உதவி மாகாண காணி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கமைவாக கூட்டத்தில் கலந்துகொண்ட காணிச்சொந்தக்காரர்கள்;

மத்தியில் கருத்துவெளியட்ட மகாண உதவிக்காணி ஆணையாளர் குறித்த மக்களுக்கான காணி கள் விட்டுக்கொடுக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியதாக கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர். வழங்கப்படாதவர்களின் காணி அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்யப்படும் என்ற தொனியில அவர் பேசியதாகவும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி கலந்துகொண்ட காணி உரிமையாளர் ஒருவர் குறிப்பிடுகையில்,வாழையூற்றில் எனக்கு ஒரு ஏக்கர் காணி உள்ளது. அதில் பயிர்கள் ,சிறுகடை என்பனவும் வைக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் நான் குறித்த காணியை அபிவிருத்தி செய்து வருகின்றேன்.. அந்தக்காணியின் ஒரு பகுதியை வழங்குமாறு என்னிடம் வந்திருந்த அதிகாரிகள் கேட்டனர். நான் அதற்கு மறுப்புத்தெரிவித்தேன். நான் அந்தக்காணியில் வீடு  கட்டி குடியிருக்கவில்லை  என்ற காரணத்தை கூறி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யமுடியும் எனவும் கடும் தொனியில் தெரிவித்தார். இந்தக்காணி உரிமைதொடர்பாக முன்னர் திருகோணமலை மேல்நீதிமன்றில் வழக்கொன்றும் நடைபெற்றது. அதில் நீதிமன்றம் எனக்கே காணி உரித்தடையது எனத்தீர்ப்பளித்திருந்தது. பின்னர்  மேல் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதுவும் மேல்நீதிமன்றினால் தள்ளுபடி  செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அழைக்கப்பட்ட பலரது காணிகளும் முன்னர் நீதிமன்ற வழக்குமூலம் தீர்க்கப்பட்ட காணிகளாகும் இவ்வாறு வழக்கொன்றில் தீர்க்கப்பட்ட காணி யை மீள அரசியல் செல்வாக்கின் மூலம் அதிகாரிகளைக்கொண்டு  மீளப்பறிக்க முற்படுகின்றனர்எனவும் அவர்தெரிவித்தார்.

ஆனாலும் சில நலிவுற்றவர்கள் அதிகாரிகளின் அச்சம்காரணமாக சிறுபகுதிகளை வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். குறித்த காணிகள் ,அளிப்பு,மற்றும் அனுமதிப்பத்திரத்தை உடைய காணிகளாகும். குறித்த சிங்கள மக்கள் முன்னர் அப்பகுதியில் காணியை கொண்டிருந்தாகவும் அதனை மீள வழங்குமாறுமே அழத்தம் கொடுத்து வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றம் மூலம் கிடைக்காததை அரசியல் செல்வாக்கின்மூலம் எடுக்க முற்படுவதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.