எமது மட்டக்களப்பு மாநகர வாழ் மக்களினதும், வெளி இடங்களில் இருந்து மட்டக்களப்பு மாநகருக்குள் வரும் பெருமளவான மக்களினதும் குடிநீர் உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமது மாநகர சபைக்கு உள்ளது.
அதற்கேற்ப மாநகர அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களின் தரம் குறித்தும் அங்கு சமைக்கப்படும் உணவின் சுகாதார நிலமைகள் குறித்தும் ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தும் நடவடிக்கைகளை பொது சுகாதார பாரிசோதகர்களுடன் இணைந்து மாநகர சுகாதாரப் பகுதியினர் மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி உணவகங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றிற்கான தரச்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் கா.சித்திரவேல், சுகாதார நிலையியல் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டு இத்தரச் சான்றிதல்களை வழங்கி வைத்தனர். இதில் ‘A’ தரத்திலான 15 உணவகங்களுக்கும் ‘B’ தரத்தினலான 23 உணவகங்களுக்கும் தரச் சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். ‘C’ மற்றும் ‘D’ தரநிலையில் உள்ள உணவகங்கள் ‘A’ மற்றும் ‘B’ சான்றிதல்களை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ளாது விட்டால், அந்த உணவகங்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் நிபந்தனை விதித்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாநகர சபைக்குள் உள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளில் 75 வீதத்திற்கும் மேற்பட்ட இறைச்சி மாநகரசபைக்கு வெளியில் இருந்துவருவதாகவும், இருந்தும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வெட்டப்படும் இறைச்சிகள் மாத்திரமே மாநகர சுகாதார பிரிவினரால் உறுதிப்படுத்தப்படுகின்றது. என்றும் அவ்வாறு வெளியில் இருந்துவரும் இறைச்சிகளை யாரும் உறுதிப்படுத்த முடியாது. எனவே இறைச்சிகளை வெளியில் இருந்து கொண்டு வருவதும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபைக்குள்ளேயே அவற்றினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கௌரவ முதல்வர் சுட்டிக்காட்டினார்.