மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர், தன்னிச்சையாகவும் எழுந்தமானமாகவும் செயற்படுவதாக, அச்சபையின் உறுப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு – செலவுத் திட்டத்தை, நேற்று (11) சமர்ப்பிப்பதற்கான அமர்வு, தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் ஆரம்பமாகி, விவாதங்கள் நடைபெற்றன.
இதன்போது பல உறுப்பினர்கள், தவிசாளருக்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததைக் காணமுடிந்தது.
பிரதேசசபையின் செயற்பாடுகளில் தவிசாளர் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் எந்தத் தீர்மானத்திலும் உறுப்பினர்களின் கருத்துகள் பெற்றுக்கொள்ளப்படுவதில்லையெனவும் குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர்.
பிரதேசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல் மண்முனைப்பற்று வர்த்தக சங்கம் ஒன்றை, தவிசாளர் உருவாக்கியுள்ளதாகவும் அதற்காக உறுப்பினர்களிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லையென்பதுடன், அது தொடர்பில் தங்களுக்க அறிவிக்கப்படவில்லையெனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
வரவு – செலவுத்திட்டத்தைக் கூட உறுப்பினர்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளாமல் எழுந்தமானமாகவே தவிசாளர் தயாரித்துள்ளதாகவும் இங்கு பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.