மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலும் 600க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பலர் கடந்த யுத்த சூழலின் போது மாற்றுத்திறனாளிகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக விசேட திட்டங்களை எதிர்வரும் வருடத்தில் உருவாக்கி அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றோம் என மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தினைச்சிறப்பித்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
தவிசாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மனிதர்கள் ஒவ்வொருவரும் சமுகத்தில் தனித்துவமான இயல்புகளுடன் ஆளுமைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இதன்படியே விசேட தேவையுடைய, விசேட திறன்களையுடைய மனிதர்களும் எம்சமுகத்தில் ஆபூர்வமான ஆற்றல்களுடன் இருக்கின்றனர். அவர்களும் சமுகத்தில் மிக முக்கிய வளங்கள், நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டியது எமது தார்மீக கடமையாகும்.
மாற்றுத்திறனுடைய மனிதர்களை புறந்தள்ளுதல், ஒதுக்கி வாழுதல் அவர்கள் தொடர்பான மதீப்பீடுகளை மேற்கொள்ளுதல் அவர்கள் மீது ஆனாமதேய பரிதாபங்களை ஏற்படுத்துதல் என்பன அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் அவமதிக்கும் செயல்பாடுகளாகும். அவர்களை திறமையானவர்களாக உருவாக்கும் பொருட்டு முறையாக வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
பிரதேசசபை சட்டத்தின்படி 19ம் பிரிவின் உபவிதி 23இன் பிரகாரம் பிரதேசசபை மாற்றுத்திறனாளி அல்லது பாதிப்புறு நிலையிலுள்ளவர்களுக்கு சேவை செய்யவேண்டிய கடப்பாடு உள்ளது. அந்த அடிப்படையில் எங்களது அபிவிருத்தி திட்டங்களில் கட்டிட நிர்மான அனுமதி வழங்கும் போது இவர்களுக்கான வசதிகளை உட்படுத்தியதன் பின்னரே அனுமதியை வழங்குகின்றோம்.
அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் அவர்களையும் இணைத்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். அந்நிலையில்தான் அடுத்து வருகின்ற வருடத்திற்கான வரவு, செலவு திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளோம். எமது பிரதேசத்தில் கடந்த யுத்த சூழல் காரணமாக பலர் மாற்றுத்திறனாளிகளாக உருவாக்கப்பட்டுள்ளனர். சிலர் இயற்கையாகவே மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களை சமுகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக வாழ்வாதாரத்தில் மாற்றுவதற்குமான வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.