மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வீதியாக மண்முனைத்துறை வீதி அமைந்துள்ளது. இவ்வீதியில் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாக மண்முனைப்பாலமும் அமைந்துள்ளது. 2014ற்கு முன்னர் நீர்மாக்கமாக படகுவழி போக்குவரத்து காணப்பட்ட நிலையில், 2014 ஏப்ரல் மாதம் புதிய பாலம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன்விளைவாக 5ம் கட்டை சந்தியிலிருந்து மாவடிமுன்மாரி வரை காப்பட் வீதியும் அமைக்கப்பட்டது. இவ்வீதி அமைக்கப்பட்டு சில காலங்களின் பின்னர் வீதி உடைக்கப்பட்டு குன்றும், குழியுமாக காட்சிகொடுத்தது. இதனால் இவ்வீதியினூடான போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டதுடன், வீதி விபத்துக்களும் இடம்பெற்றன.
இதுதொடர்பில், பல தடவைகள் இப்பகுதி மக்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில், இவ்வருடத்தில் குன்றும், குழியுமாக காணப்பட்ட இடங்கள் மீண்டும் நிரப்பட்டன. ஆனாலும் தற்போது மீண்டும் வீதியில் குன்று, குழிகள் ஏற்பட்டு நீர் தேங்கி நிற்கின்ற நிலை உருவாகியுள்ளதாக இப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
படுவான்கரைப் பகுதிக்கும், எழுவான்கரைப்பகுதிக்குமான மிக முக்கிய போக்குவரத்து வீதியாகவும், பாரஊர்திகள், வைத்தியசாலை நோயாளி காவு வண்டிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இவ்வீதியின் ஊடாக அம்பாறை, களுவாஞ்சிகுடி போன்ற பல பகுதிகளுக்கும் போக்குவரத்துச் செய்கின்றனர். இதேவேளை இலங்கை போக்குவரத்துச்சபை, தனியார் போக்குவரத்துசபையினரின் வாகனங்களும் இவ்வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறித்த இவ்வீதியானது தொடர்ச்சியாக உடைவதும், பின்னர் குழிகள் நிரப்பப்படுவதும் நீக்கப்பட்டு உறுதியானதும், நீண்டு நிலைக்கக்கூடிய வகையிலும் வீதியினை செப்பனிட்டு தருமாறு பொதுமக்கள் மற்றும் பிரயாணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.