அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

 

பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இன்று(10) இடம்பெற்ற விஷேட அமர்வின்போது, தவிசாளரால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ் வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் சபையில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது. 18 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

தவிசாளர் சார்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு எட்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து ஒன்பது வாக்குகளை இவ்வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அளித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் இச்சபை நடவடிக்கைகளுக்காக கலந்து கொள்ளவில்லை.

இச்சபை ஆட்சி அமைக்கப்பட்டபோது ஆளும் தரப்பான தவிசாளர் தலைமையிலான குழுவிற்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன சார்பில் இருந்த ஒரு உறுப்பினர் இதன்போது பிரதித் தவிசாளர் சார்பாக எதிர்த்து வாக்களித்தமையால் இவ்வரவு-செலவுத்திட்டம் தோல்வி கண்டது.

எனினும் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் வாக்கெடுப்பின் மூலம் தோல்வியுறச் செய்யப்பட்ட போதிலும் தவிசாளர் தனக்கிருக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி வரவு-செலவுத் திட்டத்தினை அங்கீகரித்துள்ளதாக இதன்போது சபையில் தெரிவித்தார்.