கிழக்கில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

 

கிழக்கில் 760ஆசிரியர்களுக்கு ஜனவரியில் இடமாற்றம்!
புதிய மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூரின் அதிரடிநடவடிக்கை
(காரைதீவு  நிருபர் சகா)
 
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒருவருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவந்த இவ்வாண்டுக்கான (2018) ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் ஜனவரியில் அமுல்படுத்தப்படவுள்ளன என கிழக்கு மாகாணக்கல்விப்ணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
 
கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களில் மொத்தமாக 760 ஆசிரியர்கள் இம்முறை இடமாற்றத்திற்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் யாவும் பாடசாலை முதலாந்தவணை தொடங்கும் 2019 ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுலுக்குவருகின்றன.
 
குறித்த 760 ஆசிரியர்களுக்குமான இடமாற்றக்கடிதங்கள் அடுத்தவாரமளவில் அனுப்பிவைக்கப்படுமென்று கூறிய பணிப்பாளர் மன்சூர்  தெரிவித்தார்.
 
இந்த 760 ஆசிரியர்களுள் 313 பேர் தாமாக விரும்பி விண்ணப்பித்ததன் அடிப்படையில் இடமாற்றசபையினூடக பரிசீலனைக்குட்படுத்தி விடுவிக்கப்பட்டவர்களாவர்.
 
மீதி 447 பேர் கஸ்ட அதிகஸ்ட பாடசாலைகளில் குறித்த காலப்பகுதியை பூர்த்திசெய்யாத அல்லது அறவே அப்படிப்பட்ட பாடசாலைகளில் பணிபுரியாத ஆசிரியர்களாவர். இப்படிப்பட்ட 447 ஆசிரியர்களின் பெயர்விபரங்கள் அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களால் தரப்பட்டவையாகும்.
 
ஏழு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட மாகாண இடமாற்றசபை மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்று இவ்விடமாற்றப்பட்டியலைத்தயாரித்து அங்கீகரித்துள்ளது.
 
மேன்முறையீட்டு இடமாற்றசபைக்கு மாத்திரம் தான் தலைமைவகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இந்த இடமாற்றம் அமுலுக்குவருவதையிட்டு குறித்த ஆசிரியர்கள் மகிழ்ச்சிதெரிவிப்பதோடு புதிய மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூருக்கு நன்றியையும் தெரிவிக்கின்றனர்.