தமிழ் தேசியக் கூட்டமைப்பே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உதய கம்மன்பில, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ஊடகவியலாளர்களுக்கு காண்பித்துள்ளார்.
மேலும், யானை – புலி ஒப்பந்தம் என்று கூறினால், சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். 2001 ஆம் ஆண்டு புலிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதானே இருக்கின்றது அவர்களை எப்படி புலிகள் என்று கூறலாம் என நீங்கள் கருதலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் மறந்து போன மக்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டது. பிரபாகரனுடன் சந்திப்பில் சம்பந்தன் கலந்துக்கொண்டார். உயிரிழந்த புலிகளின் தலைவர்களை நினைவு கூரும் நிகழ்வில் சம்பந்தன் கலந்துக்கொண்டார் என கூறியதோடு, அந்த நிகழ்வில் புகைப்படத்தையும் சான்றாகக் காண்பித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனை அடிக்கடி சந்தித்து தமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியது எமக்கு தெரியும், அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது உயிரிழந்த புலிகளின் நோக்கங்களுக்காக செயற்பட்டு வருகிறது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக கூறவேண்டும் எனவும் கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.