90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து! கல்முனையில் சம்பவம் : நான்குமாதகால நாடகம் நிறைவுக்குவந்தது!

கல்முனையில் கடந்த யூலை மாதம் பிள்ளைகளால் கொண்டு நடுத்தெருவில் இறக்கவிடப்பட்ட 90வயது மூதாட்டியை அதே பிள்ளைகள் நேற்று  கையேற்றுள்ளனர்.
இச்சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
 
மூதாட்டி நேற்றைய தினம் அவரது மூத்த மகனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த மகன் மரணமான நிலையில் மூதாட்டியின் மருமகளும் பேத்திகளும் இனி அவரை பராமரிக்க உள்ளனர். 
 
இதனால் நான்கு மாதகாலம் வைத்தியசாலையிலும் நீதிமன்றிலும் மாறிமாறி உலாவந்த அந்த மூதாட்டி நேற்றுடன் தனது இரத்த உறவுகளுடன் மீண்டும் சேர்ந்துள்ளார்.
 
அதற்காக உழைத்தவர்கள் கல்முனை இளைஞர்சேனை அமைப்பினர்.
 
அதற்கு பக்கபலமாக நின்ற கல்முனை இளைஞர் சேனை அமைப்பின் தமிழ் இளைஞர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்தக்காலத்தில் இப்படியொரு சேவையை இளைஞர்கள் இணைந்து செய்வதென்பது பலரையும் வியப்பிற்குள்ளாழ்த்தியுள்ளது.
 
சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
 
குறித்த மூதாட்டி  மல்வத்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சீனிப்பிள்ளை(வயது 90) என்பவராவார்.கல்முனை வைத்தியசாலை முன்பாக யூலைமாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கிவிடப்பட்டுள்ளார். இவ்வாறு கைவிடப்பட்டு அநாதரவாகக்கிடந்த மூதாட்டியை கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு மனிதாபிமானரீதியில்  கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சேர்த்தனர். 
 
 
இளைஞர்சேனையால்  மீட்கப்பட்ட குறித்த மூதாட்டியை   முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது. வழக்காளி சார்பாக  சட்டத்தரணி நடராஜா  சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி முத்துலிங்கம்  ஆர்த்திகா ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் கடந்த  9ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதே வேளை குறித்த மூதாட்டியை  கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின்  பிள்ளைகள் மூவரையும்  அடுத்த தவணைக்கு ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.
 
மூதாட்டியின் பிள்ளைகளான பாண்டி கிருஸ்ணன் பாண்டி குபேந்திரன் பாண்டி தவமணி ஆகியோர் மல்வத்தையிலிருந்தனர். இவர்களுக்கெதிராக தாபரிப்புவழக்கு போடப்பட்டுள்ளது.
 
கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவுப்படி மீண்டும் மூதாட்டி  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது குறித்த மூதாட்டியின்  நிலை கண்டு மனிதாபிமான முறையில் சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். றிபாஸ் அவர்களும் ஆஜராகி மூதாட்டிக்காக  ஆதரவாக வாதாடியிருந்தனர்.
 
இதேவேளை குறித்த தாயின் நாலாவது பிள்ளை காரைதீவிலுள்ளார். அவருக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கல்முனை தமிழ்பிரிவு சமுகசேவைப்பிரிவு இவரை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டிருந்தது. 
 
கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை அமைப்பின் பொதுச்செயலாளர் சட்பீடமாணவன் அ.நிதாஞ்சன் கூறுகையில்: 
 
 
சேனையினரால் குறித்த மூதாட்டிக்கு அவரது பிள்ளைகளிடம் இருந்து நீதிமன்றம் மூலம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
 
மூதாட்டி வசிப்பதற்கு ஏற்ற வகையில் சேனையினால் இருப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டது.
 
இந்த விடயத்தில் சேனையினர் பெற்றோரை முதுமை காலத்தில் கைவிடும் பிள்ளைகளுக்கும் இந்த சமூகத்துக்கும் ஒரு பாடம் கற்பித்துள்ளனர்.
 
இந்த விடயத்தில் பங்காற்றிய எமது உறவுகள் வைத்தியசாலை நிர்வாகம் சட்டத்தரணிகள் எமது ஊடகவியலாளர் அனைவருக்கும் சிரம் தாழ்த்துகிறது இளைஞர் சேனை. 
மூதாட்டி நேற்றைய தினம் அவரது மூத்த மகனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மூத்த மகன் மரணமான நிலையில் மூதாட்டியின் மருமகளும் பேத்திகளும் இனி அவரை பராமரிக்க உள்ளனர். மகிழ்ச்சி.என்றார்.