இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் தடுத்தால் உரிய நபர் அல்லது திணைக்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியுமென உதவிப்பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முன்னாயத்த ஒன்று கூடல், செயலக கேட்போர் கூடத்தில் இன்று(7) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் உதவிப்பணிப்பாளர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை பெய்கின்றது. இம்மழைகாரணமாக அனர்த்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவற்றினை எதிர்கொள்வதற்கு, அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்களுக்கான முன்னறிவித்தல்களையும் வழங்க வேண்டும். இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் பொதுமக்கள் அல்லது அரச திணைக்களங்கள், பொதுநிறுவனங்கள் தடுத்தால் உரிய நபர்களுக்கு அல்லது திணைக்களங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும். மேலும் அவசர உதவிகளுக்காக தனியார், அரச வாகனங்களை, பொருட்களைப் பயன்படுத்த முடிவதுடன், பின்னர் அதற்கான நஸ்டஈடுகளை வழங்க முடியும். என்றார்.