எம் நாட்டின் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை கிராமங்களிலுள்ள சமூக மட்டங்களுக்கு கொண்டு செல்வதை நிறுத்தி விரைவாக ஒருமித்து தீர்வு காணுமாறு மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்
கடந்த ஒருசில மாதமாக பாராளுமன்றத்திலுள்ள ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் என்பது சிறுபான்மையினருக்கு எவ்வித தீர்வுகளையும் பெற்றுத்தராது.என்பதை சிறுபான்மையினராகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினராகிய எமக்கு தேசியநலன் இருக்க வேண்டும். அந்த தேசியநலன் ஊடாக தேசியக் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகளை, அரசியல் கட்சிகளை தனிநபர் ரீதியாகக் கையாண்டு சிறுபான்மையினருக்கு மத்தியில் உள்ள அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதென்பது தமிழர்களாகிய எங்களை பலவீனப்படுத்தும். என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு எம் மத்தியில் நிற்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் குறிப்பாக, கிழக்கு மாகாணம், வன்னிப்பகுதி இரண்டு பிரதேசங்களிலும்
மூன்று இன மக்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசங்களில் ஏற்கனவே தமிழர்கள் பிளவு பட்டு
நலிவடைந்த நிலையில் இருப்பதால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ஒரு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் மத்தியிலுள்ள தேசியக் கட்சிகள் எமது பிரதிநிதிகளை, கட்சிகளை பிரிப்பதில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படப் போவது எமது சமூகம். இந்த நிலையில் வடக்கு கிழக்கில் நிருவாகங்கள் முன்னேற்றகரமாக செயற்படத் தொடங்கியும், பொருளாதாரவளர்ச்சி, கல்விவளர்ச்சி, சுகாதாரத்துறையில் முன்னேற்றம்,கலாசார முன்னேற்றங்கள், தொடர்புகளில்வளர்ச்சி, தொழில் துறையில்,ஜனநாயகப்பண்புகள்,அரசியல் தலைமை உருவாக்கம் போன்ற விடயங்களில் முன்னேற்றகரமான தோற்றப்பாடுகள் ஆரம்பித்துள்ள நிலையில் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் எமது செயற்பாடுகளை அஸ்தமித்துள்ளது.
எனவே தேசிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஒருமித்து தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுப்பதோடு, மண்முனைமேற்கு வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் காவல் அரணில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதோடு, அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்