கலாபூஷணம் கோணாமலை திரவியராசா

 

சம்பூர் மண்ணில் 1952.02.19 இல் கோணாமலை தங்கம்மா தம்பதியினருக்கு மூன்றாவது செல்வப் புதல்வராக அவதரித்தார். ஆரம்பக்கல்வியை தி/சம்பூர் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கற்றார். தமிழில் சிறு வயதிலேயே அறிவு கொண்டு 1962 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு மாணவனாக சித்தி பெற்று, உயர் கல்வியை மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றார். கலைப் பட்டதாரியாக தமிழில் சிறந்த புலமை கொண்டு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு மூதூர் பிரதேச நிருபராக பணியாற்றினார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதினார். அரசியலில் ஆர்வம் கொண்டு அண்ணன் அ.தங்கத்துரை அவர்களின் அந்தரங்க செயலாளராக செயற்பட்டார். தமிழ் இளைஞர்கள் பல பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் முன்னின்றுழைத்தார். அகில இலங்கைக்கான சமாதான நீதிவானாக ( JP ) பணியாற்றினார். மலையகத்தில் பெருந்தோட்ட துறையிலும் பணியாற்றினார், கட்டுமானத் துறையின் மேற்பார்வையாளராகவும் ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் கிளார்க் காகவும் ஆசிரியராகவும் அதிபராகவும் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியதோடு‌ பல சமூக நலன் சார்ந்த அமைப்புகளில் ஆலோசகராகவும் செயற்பட்டார், இவர் சமூகத்துக்கும் கலைக்கும் ஆற்றிய தொண்டுகள் காகித “கலாபூஷணம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மற்றும் மூதூர் மத்தியஸ்த சபையின்(காணி விடயங்கள்) தீர்ப்பாளராக மரணிக்கும் வரை பணியாற்றினார். 2006 இல் சம்பூர் மண்ணில் இருந்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்தபோது. அவர்களுக்காக பத்திரிகைகளில் காத்திரமாக குரல் கொடுத்தார். சம்பூர் மீள்குடியேற்றம் பற்றிய முன்னெடுப்புகளில் முன்னின்றும் திரைமறைவிலும் அயராது உழைத்தார். சம்பூரில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை அது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசம். என பசில் ராஜபக்ஷ அறிக்கை விட்டபோது, சம்பூரின் தொன்மை பூர்வீகம் என்பவற்றைக் காட்ட 2010 இல் “மூதூர்”என்ற நூலையும். “சம்பூர்” என்ற வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஆய்வு நூலையும் வெளியிட்டு உலகுக்கு எடுத்துக் காட்டினார். இன்று 4.12.2018 இவர் எம்மை விட்டு பிரிந்தது, குடும்பத்தாருக்கு மட்டுமில்லாது இப்பிரதேசத்திற்கான பாரிய இழப்புமாகும்.