ஆறாவது கிராமிய வங்கிக்கிளை திறப்பு

நுண்கடன் திட்டத்தினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப்பாதுகாக்கும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசங்கள் தோறும் வாழ்வாதாரத் தொழில் விஸ்தரிப்பு கடன்களை வழங்கும் திட்டத்துடன் கிராமிய வங்கிகளின் செயற்பாடுகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஏறாவூர் வடக்கு- மேற்கு பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளை செங்கலடியில் புதன்கிழமை (05) திறக்கப்பட்டுள்ளது.

பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கேவி. தங்கவேல் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கூட்டுறவுச்சங்கத் தலைவர் எஸ். சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமுகாமையாளர் திருமதி எஸ். உதயநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உறுப்பினர்கள் வங்கிக்கணக்கு திறத்தல் மற்றும் கடன்கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறாவது கிராமிய வங்கிக்கிளை இதுவாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தனியார் நிறுவனங்களிடமிருந்து நுண்கடன்களைப்பெற்றுக்கொண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அக்கடன்களைச் செலுத்தமுடியாது தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த பரிதாப நிலையினைக் கருத்திற்கொண்டு கிராமிய வங்கிகள் மூலமாக வாழ்வாதாரத் தொழில்களுக்கான கடன்களை புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இலகுவான விதிமுறைகளின்கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.