கிழக்கிலங்கையின் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
சர்வதேச மாற்றுத்திறனாளிக் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சாந்ர்ந்து செயற்படும் அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் திங்கட்கிழமை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் அனுசரணையில் இந்த 32பேர் கொண்ட சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டு சின்னஞ்சூட்டப்பட்டது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொலலாகம, திருமதி ரோகித்த போகொல்லாகம, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட சாரண சங்கத் தலைவருமான மா.உதயகுமார், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் தேசகீர்த்தி விவேகானந்த பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கொழும்பு சாரணர் சங்கத் தலைமையகத்திலிருந்து கே.கபில குமார, எச்.ராஜரட்ண, மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் தலைவர் வி.டி.தர்சன், சாரணத் தலைவர்களான எஸ்.பற்றிக், என்.அன்பு, ரி.தினேஸ், வை.எம்.சீ.ஏ.யின் சாரண ஆசிரியர்களான திருமதி கே.ஐஸ்வர்யா, எவ்.செல்வமலர், ஜெ. சிந்தியா ஆகியோரும் பங்கு கொண்டனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சமூகததில் அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது சாரணர் படை உருவாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் தெரிவித்தார்.