மாபெரும் உதைபந்தாட்ட சமரை வெற்றி கொண்டது பன்சேனை பாரி.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய வீராங்கணைகளுக்கும், பன்சேனை பாரி வித்தியாலய வீராங்கணைகளுக்கும் இடையிலான உதைபந்தாட்ட மாபெரும் சமரை ( விக் மச்) பன்சேனை பாரி வித்தியாலயம் வெற்றிவாகைசூடியது.

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், இன்று(25) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த போட்டியிலேயே 1 – 0 என்ற கோள் வித்தியாசத்தில் இவ்வருடத்திற்கான மாபெரும்சமரை பன்சேனை பாரி வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முதன்முறையாக கடந்த வருடமே பெண்களுக்கான உதைபந்தாட்ட மாபெரும் சமர் (விக் மச்) பன்சேனை பாரி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இரண்டாவது மாபெரும் சமர் (விக் மச்) இன்று நடைபெற்றது. இதன்போது, போட்டியில் பங்கேற்ற இருஅணி வீரர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் அணிக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், குறித்த இரு அணியினரும் தேசியமட்டப் போட்டியில்; பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வித்தியாலய அதிபர் சு.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதேசசபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.