பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்புத்திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.

பாடசாலைகளில் வாசிப்புக்கழகங்களை உருவாக்கி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்ய வேண்டுமென மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் இன்று(24) நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழா நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும் வலயக்கல்விப் பணிப்பாளர் உரையாற்றுகையில்,

மாணவர்களின் வாசிப்பு பழக்கமானது குறைவடைந்து செல்கின்றது. இதனை விருத்தி செய்வதற்கு பாடசாலைகளிலே வாசிப்புக்கழகங்களை உருவாக்கி அதன்மூலமாக வாசிப்புத்திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிள்ளைகளையே சித்தியடைந்ததாக பலரும் பார்க்கின்றனர். இந்நிலை மாறவேண்டும். 70புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்கள் அனைவருமே புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர். என்றார்.
இதன்போது, புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத்தராதர சாதாரணதர, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், அதிகவரவு கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நூலக கட்டிடமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.