அரசியல் மாற்றம் சிறுபான்மை, சர்வதேசத்தை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா.

தற்போதைய அரசியல் மாற்றம் சிறுபான்மையினரையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் நாடகமா என்ற சந்தேகம் இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்ற போது எண்ணத் தோன்றுகிறது என விரிவுரையாளரும் கல்வியியலாளருமான கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா கேள்வியெழுப்புகிறார்.

இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தார்.

தற்கால அரசியல் சூழ்நிலையென்பது பொது மக்களைப் பொறுத்தவரையில் புரிந்து கொள்ள முடியாத ஒரு வியமாக இருந்தாலும் அறிவுஜீவிகள் மத்தியில் ஊகங்களின் அடிப்படையில் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. முதலாவது விடயம், அரசியலமைப்புக்கு முரணான வகையில் 19ஆவது திருத்தத்தின் 46-2, 46-4 படி, பாராளுமன்ற பெரும்பான்மை அல்லது பிரதமர் ஒருவர் நடத்த முடியாத நிலை இருப்பதாக எழுத்து மூலம் அறிவித்தால் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஆனாலும் அது பொதுத் தேர்தலுக்கு அழைப்புக் கோர வேண்டும். அல்லது அடுத்த பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த விடயத்தில் அதற்கு அரசு தவறியிருக்கிறது. ஜனநாயக உரிமை மீறப்பட்டிருக்கிறது.

ஆனால் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து தமிழ் மக்களின் தீர்வைப்பற்றிப் பேசும்போது தான் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை யென்றும் தேர்தல் மூலம் தாங்கள் தெரிவு செய்ப்பட்டால் தீர்வு தொடர்பாக எழுத்து மூலம் தரலாம் என்றும் புதிய பிரதமர் கூறியிருக்கிறார்.

எனவே புதிய பிரதமர் தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் அல்ல என்பதை நிரூபித்துள்ளதுடன் ஜனநாயக விரோதமான செயல் என்பதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது முதலாவது விடயம்.

இரண்டாவது, பிரதமராக ஜனநாயக விரோதமாக நியமிக்கப்பட்டார் என்றால் அவரை எதிர்க்கட்சித்தலைவர் ஏன் சந்திக்கச் செல்ல வேண்டும். தற்போதைய புதிய பிரதமர்
பாராளுமன்ற பெரும்பான்மை குறித்து நிரூபணங்கள் செய்யப்படாமல் இருக்கின்ற நிலையில் அவரைச் சந்திக்கச் சென்றமையானது தமிழ் மக்களுக்கெதிரானதொரு வரலாற்றுத் தவறு.

2015ல் நல்லாட்சியை உருவாக்குவதற்கு ஜனாதிபதியாவதற்கு மைதிரிபால சிறிசேன எப்படி பிரிந்து வந்தாரோ, மகிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்ட நிலையில் அவருடைய அரசைக் கவிழ்த்து மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றியது போல, நவம்பர் 7ம் திகதி புதிய அரசியலமைப்பு முன்வைக்கவேண்டிய நிலையில், ஐ.நா. வின் மனித உரிமைச் சபையில் பெப்ரவரி 22ஆம் திகதி அதனுடைய தீர்மானம் நிறைவேற்றிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அது போல பண வீக்கம் அதிகரித்துள்ள பொருளாதாரம் மிகமோசமாக இருக்கிறது. வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்ற முடியாத நிலையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வுகள், அரசாங்க உத்தியோகத்தர்களின் வேதன உயர்ச்சி இவ்வாறானவற்றினைச் செய்யமுடியாத நிலை இப்படியான பல பிரச்சினைகள், இந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசக குழப்பத்தினை உருவாக்கி புதிய பாராளுமன்றமோ, புதிய தேர்தலுக்கோ வியூகம் ஒன்றை அமைத்து நாடகம் ஒன்றினைக் கொண்டுவந்து அழுத்தங்களிலிருந்தும் பெபரவரி மாதவிடயத்திலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது.

இன்னுமொரு பிரச்சினை, இத்தகைய புரட்சியானது ஒரு சுய நலப் போக்காக இருந்தாலும் கூட , இலங்கையினுடைய பண வீக்கம் தலைக்குமேல் போய்க் கொண்டிருக்கின்ற நிலையில், இதில் பாதிக்கப்படுகின்றது சாதாரண அப்பாவிப் பொது மக்கள்.

பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச முதலீட்டாளர்கள் விலகிக் கொண்டிருக்கிறார்கள். ஆடைகள் ஏற்றுமதி தடைப்பட்டிருக்கிறது. ஜீ.எஸ்.பி வரிச்சலுகை விலக்கப்படவிருக்கிறது. தேயிலை ஏற்றுமதி தடைப்படப்போகிறது. அதில் தொழிலாளர்களுடைய போராட்டம் நடைபெறுகிறது. அரச இயந்திரம் முடக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் பணவீக்கம் அதிகரித்து மக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்போகிறது. நாடு அதலபாதளத்துக்குச் செல்லவிருக்கிறது.
அகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த கடன் செலுத்துவதே இந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது பெரிய பிரச்சினை. அதே போல இந்த 4 நாட்களில் நடைபெற்ற பிரச்சினை இன்னும் மோசமாகச் செல்லும். அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 16ஆம் திகதியில் 200ரூபாவுக்குச் செல்லும் என்றும்சொல்லாம். அதறகான சூழல் மிக விiவாக ஏற்படும். இலங்கை வரலாற்றிலேயே நாணயத்தினுடைய பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்தது இப்போதுதான்.

எனவே இந்தச் சூழ்நிலைகளை ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது இலங்கை மக்களுடைய முதுகின் மேலேயே இந்த வரிச் சுமைகள் அறவிடப்படுகின்றன. அவர்களுடைய வாக்கிலே வந்தவர்கள். அவர்களுடைய நலன்களுக்காக கொள்கைகளுக்காக மக்களை வருத்துகின்ற அதே வேளை சர்வதேச நிலைப்பாடுகள் ஊடாக தங்களுடைய நிலைப்பாடுகளை மாற்றுவது தேசியவாத சிந்தனையை அடிபபடையாகக் கொண்டு உலக நாடுகளை ஏமாற்றுகின்ற போக்குகள்தான் இங்கிருக்கின்றன.

சிறுபான்மை மக்களுக்கான விடுதலையோ, அரசியல் தீர்வோ இங்கு கிடைக்கப் போவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவுமில்லை. அந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரசோ, மனோ கனேசனுடைய முன்னணியோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஐ.தே.க. வை விட்டு வெளியேறுமாக இருந்தால் அவர்கள் எதிர்பாரப்பதை மகிந்த அரசு கொடுக்க மாட்டாது. இதற்கு மகிந்தவின் நேற்றைய பதிலே சிறந்த உதாரணமாகும்.

குறைந்த பட்ச அதிகாரமுடைய அரசியல் தீர்மானம் ஒன்றைத் தருகின்ற அரசியல் திட்டமாகத்தான் இந்த அரசியலமைப்பு முன்வைப்பாக இருந்தது. அந்த தீர்மானமும் இல்லாதொழிக்கப்படுகின்றதாகத்தான் இந்த ஆட்சி மாற்றத்தின் அடிநாதமாக விளங்குவதாக நான் உணர்கின்றேன். அந்த வகையில் ஏமாறப் போவது சிறுபான்மையினமக்களே.