லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

சூறாவளி லுவன் (Luban)

ஆராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக (Deep Depression) இருந்து, நேற்றய தினம் (08.10.2018) சூறாவளியாக உருமாறிய லுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்து மணிக்கு 07 கி.மீற்றர் வேகத்தில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இது ஓமான் நாட்டின் சலலா (Salalah) பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 800 கி.மீற்றர் தூரத்திலும் ஜெமன் நாட்டின் சொகொற்றா தீவிலிருந்து (Socotra Islands) கிழக்காக 680 கி.மீற்றர் தூரத்திலும் ஜெமன் நாட்டின் அல்-கைடா (Al-Ghaidah) பிரதேசத்திலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 940 கி.மீற்றர் தூரத்திலும் தற்போது (09.10.2018-காலை 0900 மணி) காணப்படுகிறது.

இது அடுத்த 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்துவரும் 5 நாட்களில் ஜெமன் நாட்டிற்கும் ஓமான் நாட்டின் தென் கரையோரப் பிரதேசத்திற்கும் இடையில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 10 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போது (09.10.2018 – காலை 0900 மணி) ஒரிஷா (Odisha) மாநிலத்தின் கோபால்பூர் (Gopalpur) பிரதேசத்திலிருந்து தென்கிழக்காக 560 கி.மீற்றர் தூரத்திலும் ஆந்திர பிரதேசத்தின் (Andhra Pradesh) கலிங்கப்பட்டணத்திலிருந்து (Kalingapatnam) தென்கிழக்காக 510 கி.மீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.

இது அடுத்த 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclone) வலுவடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் ஒரிஷா மாநிலத்தையும்; வட ஆந்திர பிரதேசத்தையும் நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 11ம் திகதி;  கோல்பூரிற்கும் கலிங்க பட்டணத்திற்கம் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.