பன்னூல் படைப்பிலக்கியவாதி வெல்லவூர்க் கோபாலின் கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்.

பன்னூல் படைப்பிலக்கியவாதி வெல்லவூர்க் கோபாலின் நீண்டகாலத் தேடலின் அறுவடை கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்.

ஆழ்கடல் கடந்த ஆய்வு ஆழமான ஆய்வு ஆய்வுச் செறிவு நிறைந்த ஆய்வு அதனால் கண்ணகி வழபாட்டில் ஈடுபாடு கொண்டோர்க்கு அற்புதமானதொரு படையல். அந்தப் பேழையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் ஐப்பசித் திங்கள் ஏழாம் நாள் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.45 மணியளவில் மட்டக்களப்பு தேவநாயகம் கலை அரங்கில் அதன் தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் வெளியிட்டுப் பெருமை கொள்கிறது.

இப்பெரும் நூல் அரங்கேற்ற விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி ப. புஸ்பரட்ணம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி வ. மகேஸ்வரன் ஆகிய பெருந்தகைகள் முன்னிலை வகிக்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்லாவெளி, அதுவொரு தமிழ்வெளி, தமிழ் செய்யும் வல்லோன் பலரை உலகிற்கு ஈந்தளித்து உவகை கொள்ளும் பதி தமிழ் இலக்கிய உலகு நன்கறிந்த கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களையும் நமக்கீந்த பெரும் பதியும் அப்பதியேதான்.

அந்த மண்ணின் மகிமை அகவை பதினான்கிலே அவருக்குள் கவிதை ஊற்றெடுக்கத் தொடங்கிற்று. க.பொ.த. (உ.த) பயிலும் காலத்தே அவருக்குள்ளிருந்து பாய்ந்த தமிழ் வெள்ளம்தான் ‘கன்னிமலர்’ எனும் கவிதை நூல். இந்நூல் வெளியீட்டு விழாவில் சொல்லின் செல்வர் செ. இராசதுரை அவர்கள் கவிக்கோவைப் பாராட்டித் தட்டிக்கொடுத்தார்.

அவ்வாறு பெருக்கெடுத்த இரண்டாவது கவிமழை ‘இதயச்சங்கமம்’. அம்மலருக்குத் தமிழ்ப் பெருந்தகை தமிழ்ப் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அணிந்துரை வழங்கித் தமிழுலகிற்கு அவரை அறிவித்தார்.

1990களில் நமது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்த அசாதாரண நிலைமை இப்படைப்பாளியைப் புலம்பெயர வைத்தது.

‘இதயச்சங்கமம்’ என்ற நூலையும் சுமந்தே கடல் கடந்தார். அங்கே தமிழறிஞர்கள் பலரோடு தொடர்புகளை ஏற்படுத்தினார். அதனால் அவருக்குள் ஊற்றெடுத்த தமிழ் வேகம் கொண்டது

புலப்பெயர்வு அவர் புலமையைக் கூர்மைப்படுத்திற்று. கவிவானிற்குற் பாடிப் பறந்து திரிந்த குயில் தன் சிறகுகளை அகல விரித்து அதற்கும் அப்பால் வட்டமிடத் தொடங்கிற்று.

தன்னைக் கவிஞனாக அறிமுகப்படுத்திப் பின்னர் இலக்கியம், வரலாறு, சமூகம் சார்ந்த ஆய்வுப் புலமையென்று பல பரிமாணங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார். தமிழகத்தில் வாழ்ந்த ஆரம்ப காலப்பகுதியில் ஈழத்தில் நிகழ்ந்த விடயங்களை அவர் ஆள்மனதில் தாக்கத்தையேற்படுத்திய காரணத்தினால் அப்போது அவர் நெஞ்சில் பதிவான காட்சிகள் ‘நெஞ்சக்கனல்’ என்ற நூலில் பதிவானது. அந்நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.

அங்கவர் வாழ்ந்த காலப்பகுதியில் அவருக்கேற்பட்ட அறிஞர் பெருமக்கள் உறவு அவர் தேடலுக்குக் கைகொடுத்தது. அதன் பயனாக
(1) தமிழக வன்னியரும், ஈழத்து வன்னியரும்
(2) மட்டக்களப்பு வரலாறு அறிமுகம்
(3) மலையாள நாடும் மட்டக்களப்பும்
(4) மட்டக்களப்புத் தேசம் வழக்காறும், வரலாறும் என்னும் வரலாற்று ஆய்வு நூல்கள் வெளிவந்தன்.

இவ்வாறு இருபது நூல்களைப் படைத்துப் புகழ்கொண்ட கவிக்கோ அவர்கள் இயல்பாகவே கண்ணகி வழிபாடோடு ஈடுபாடு கொண்டவர். கண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும் என்ற தனது ஆய்வு நூலை தன்னுடைய 21 ஆவது நூலாக வெளியிடுகிறார்.

தமிழகத்திலிருந்து ஈழம் வரையான கண்ணகி வழிபாட்டின் நீண்ட வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது இந்நூல்.

இதற்காகத் தமிழகத்தில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டதுடன் இத்துறையில் புலமையுடைய தமிழக, கேரள மாநில அறிஞர்களுடன் கலந்துரையாடி தமிழகத்தின் வரலாற்றுப் புலமை வாய்ந்த கண்ணகி வழிபாட்டு ஆலயங்கள் பலவற்றின் புகைப்படங்களையும் வழங்கியுள்ளார்.

ஈழத்திற்கு கண்ணகி வழிபாடு பரவிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து தமிழர்களிடையே கண்ணகி வழிபாடாகவும், சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாகவும் பரினமித்த வரலாற்றை ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆரம்ப காலங்களில் மூன்று கண்ணகி ஆலயங்களைக் கொண்டிருந்த கிழக்கிலங்கை 18ம் நூற்றாண்டில் 15 ஆலயங்களையும், தற்போது 60 ஆலயங்களையும் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கண்ணகி வழிபாட்டின் பிரதான மையமாக இலங்கை விளங்கியிருக்கின்றது என்பதோடு தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார். தமிழர் சமூகத்திற்கும், எதிர்காலச் சந்ததிக்கும் தான் பிறந்த மண்ணிற்கும் பயனுள்ள மிகப் பெரிய பணியைச் செய்திருக்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றி வரும் அரிய தமிழ்ப் பணிகளை தமிழ் கூறும் நல்லுலகம் அங்கீகரிப்பதன் அடையாளமாக பல்வேறுபட்ட பாராட்டுக்கள், கௌரவப்பட்டங்கள், பெறக்கரிய விருதுகளென இன்னோரன்ன பெருமைகளைப் பெற்றாலும் அடக்கமே வாழ்வு, எளிமையே சிறப்பென வாழ்ந்திடும் இப்பெருமகனை நாடும் நாமும் வாழ்த்திடுவோம். அவர் தமிழ்ப் பணி தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவருடைய இந்த நூல் அரங்கேற்றத்தில் நாமனைவரும் பங்கேற்று அவ்விழா வெற்றியடைய உழைத்திடுவோமாக.

வே. தவராஜா
செயலாளர்
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம்