வெருகலம்பதிக்கு வேல்நடைபஜனை

பொன்ஆனந்தம்

கிழக்கின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்நிட்டு நடைபெறும் வேல்நடைபஜனை இன்று காலை 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

மூதூர் கிழக்கின் சூடைக்குடாப்பகுதியில் உள்ள மத்தளமலை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இருந்து 12 வது வேல்நடை பஜனை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயம் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாபூசணம் அ.குகராஜா தெரிவித்தார்.

வரும் 10.09.2018 அன்று வெருகலம்பதியானின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவுள்ளநிலையில் 10 நாட்களைக்கொண்ட இந்த வேல்நடைபஜனை ஆரம்பிக்கப்பட்டு கொடியேற்ற தினத்தன்று பல கிராமங்களை ஊடறுத்து பல ஆலயங்களில் பஜனை மற்றும் பூசைகளை கண்டு வெருகலம்பதியை அடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடையில் உள்ள பல கிராம ஆலயங்களிலும் தங்கி பயணிக்கும் இப்பஜனையின்போது அடியார்கள் பலரும் இணைந்து கொள்வார்கள். இன்று காலை மத்தளமலை முருகனாலயத்தில் வைத்து பூசிக்கப்பட்ட புனித வேல் 11 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு 12வது வருடமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது