திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவில் நேற்று கடும்வாதப்பிரதி வாதங்கள்

மூதூர் நிருபர்

திருகோணமலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொது மலசல கூடத்திட்டத்தை அனுமதியின்றி பலாத்காரமாக அமைக்கப்போவதாக தெரிவித்த கருத்தால் மாவட்ட அபிவிருத்திக்குழுவில் நேற்று கடும்வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டன.

முன்னாள் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சராக விருந்த ஆரியவதிகலப்பதி நகரசபை இதற்கு அனுமதி தராவிட்டால் பலாத்காரமாக அமைக்கப்போவதாக தெரிவித்த கருத்தால் இந்நிலமை ஏற்பட்டது.

நகரசபைக்காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பல மில்லியன்கள் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இப்பொது மலசலகூடத்திட்டத்திற்கு அனுமதி நகரசபை தராவிட்டால் அனுமதியின்றி மலசலகூடம் அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஆரியவதி கூறியதால் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதற்குப்பதிலளித்த மாவட்ட அபிவிருத்திச்சபையின் இணைத் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் புஞ்சிநிலமே நகரசபைத்தலைவர் இவ்விடயத்தில் சட்ட ஒழுங்குகளுக்கேற்றவகையில் இத்திட்டத்தை கையாளுமாறு தெரிவித்தார். நாட்டின் சட்டதிட்டத்தை மாற்ற யாருக்கும் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எவரும் பலாத்காரமாக நகரசபையின் சட்டதிட்டத்திக்கு மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தமுடியாது. எனவும் நகரசபைக்கு ஆதரவாக பேசினார். இதனாலேயே சபையில் சற்று அமழிதுமழி ஏற்பட்டது.

இதற்குப்பதிலளித்த நகரசபை த்தலைவர் ந.இராசநாயகம் குறிப்பிடுகையில்,பொதுமக்களின் நன்மைகருதி பழைய நூலகத்தில்காணப்படும் மலசலகூடங்கள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்ய நகரசபைதிட்டமிட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை யினால் திட்டமிடப்பட்ட காணி வேறு பொதுத்தேவைக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும் இதனாலேயே இழுபறி உள்ளது. எனவும் சுட்டிக்காட்டினார். இதற்கு ஆரியவதி கலப்பதி தனது எதிர்வாதத்தை முன்வைத்ததுடன் அனுமதி தராவிட்டால் அனுமதியின்றி மலசலகூடம் அமைக்கப்படும் என தெரிவித்ததால் கூட்டத்தில் கருத்துமோதல் அதிகரித்தது.

இதனையடுத்து குறுக்கிட்டமாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும்; பாராளுமன்ற உறுப்பினருமான புஞ்சிநிலமே இவ்விடயத்தை அரச அதிபர் ,நகர சபைத்தலைவர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து பேசி முடிவுக்குகொண்டு வருமாறு கூறினார். ஆயினும் நகரசபை தங்களுக்குள்ள சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு கூறியதுடன் எவரும் பலாத்காரம் செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு ஆதரவாக மற்றுமொருபிரதி தலைவரான அப்துல்லா மரூப்பும் எம்பியும் கருத்து வெளியிட்டார். இதுபற்றி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி சபையில் குறிப்பிடுகையில்,பல மில்லியன் நிதி இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நகர சபையின் அனுமதிகிடைக்காததால் இழுபறி நிலமை காணப்படுவதாகவும் விபரித்தார்.