மத்திய அரசின் சதித்திட்டமே மட்டு.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்கள் நியமிப்பு – இரா.துரைரெட்ணம்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கென கண்டி, கொழும்பு, களுபோவெல, அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளிலிருந்து சுகாதார உதவியாளர்களாக புதிய நியமனம் வழங்கி அவர்களை குறிப்பிட்ட மாதங்களுக்கிடையில் இடமாற்றம் செய்து, மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு தமிழர்களுக்கு நியமனம் வழங்காமல் தடுத்தது மத்திய அரசின் சதித்திட்டமாகும். என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ர உறுப்பினருமாகிய இரா.துரைரெத்தினம் தெரவித்தார்.

தமிழ்மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுகாதார உதவியாளர் 140பேரை மீண்டும் இடமாற்றம் செய்து அவ்விடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய சுகாதார உதவியாளர்களுக்கு புதியநியமனம் வழங்கி சேவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சுகாதார அமைச்சிற்கு விரிவான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

அக்கடிதத்தில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், 650ற்கு மேற்பட்ட ஊழியர்கள் (சிற்றூழியர், சுகாதார உதவியாளர்கள்) வேலை செய்கின்றனர். 76வீதம் தமிழர்களும், 23வீதம் முஸ்லிம்களும், ஒருவீதம் சிங்களவர்களும் உள்ள இம் மாவட்டத்தில் நூறு வருட காலகட்டத்திற்குள் முறையாக பல தடவைகள் ஆளனி உருவாக்கப்பட்டு சிற்றூழியர் நியமனம் செய்யப்பட்டிருந்தால் 750ற்கு மேற்பட்ட சிற்றூழியர் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆளனி அனுமதி வழங்குவதில் பாராமுகமாக இருந்ததன் காரணமாக பலவருடத்திற்கு ஒருதடவை ஆளனி அனுமதிக்கப்பட்டதன் விளைவாக மிகக் குறைந்த 625பேர் ஆளணியே அனுமதிக்கப்பட்டுள்ளது.

615 அனுமதிக்கப்பட்ட ஆளனி உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு புதிய நியமனங்களை வழங்காமல் கொழும்பு, கண்டி, களுபோவெல, அனுராதபுரம், போன்ற வைத்தியசாலைகளுக்கு பெரும்பான்மையினருக்கு புதிய நியமனம் வழங்கி அவர்களை 99வீதம் தமிழ்பேசுகின்ற நோயாளர்கள் உள்ள மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தமிழ் பேசத்தெரியாத 160ற்கு மேற்பட்ட சுகாதார உதவியாளர்களை இரண்டு வருடங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் மாற்று இனத்தைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்து மாவட்டத்திலுள்ள தமிழர்களை நியமனம் செய்யாமல் புறக்கணித்தல் என்பது அரசியல் ரீதியான, இனரீதியான செயல்பாடுகள் சுகாதாரஅமைச்சின் ஊடாக இடம் பெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

மனித உயிருக்கு சேவையாற்றுகின்ற வைத்தியத்துறை அமைச்சு தமிழ் பகுதிகளுக்கு இனரீதியாக நியமனம் செய்யப்படுதல் என்பது வரவேற்கத்தக்க விடயமல்ல எனவே இதனை மீள் பரிசீலனை செய்து மிகவும் தூரஇடங்களிலிருந்து வருகை தந்து பலதுன்ப துயரங்களை தாங்கிச் சேவையாற்றுகின்ற சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்து இம்மாவட்டத்திலுள்ள தமிழர்களை புதிய நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.