பொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே?

பொத்துவில் செங்காமம் தமிழ்மக்களின் பிரேதம் அடக்கப்படுவது எங்கே?
5கி.மீ. சுமந்துவந்து அடக்கும் அவலநிலை: மயானம் கேட்ட மனுக்கள் கிடப்பில்.. !
பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் சாதிப்பாரா?
(காரைதீவு நிருபர் சகா)

பொத்துவில் பிரதேசத்திலுள்ள செங்காமம் கிராமத்தில் வாழும் தமிழ்சிங்கள மக்களின் பிரேதங்களை அடக்குவதில் தொடர்ந்து சிக்கல்நிலை நிலவிவருகின்றது.
இவர்களது பிரேதங்களை 5கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பொத்துவில் இந்துமயானத்திற்கு சுமந்துகொண்டுவந்து அடக்கவேண்டிய அவலநிலையுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் தமக்கென ஒரு மயானத்தை அமைத்துத்தரவேண்டும் என பொத்துவில் பிரதேசசபை பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களிடம் எழுத்துமூல வேண்டுகோள்களை விடுத்திருந்தன. அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏனெனில் இன்னும் மயானத்திற்கான காணி ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் அங்குள்ள பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்தீபனிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

இது உண்மை. அந்த மக்களின் நியாயமான ஆதங்கம் இது. இது தொடர்பில் நாம் எமது பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத்திடம் மனுச்செய்தோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு கடந்த மே மாதம் 06ஆம் திகதி பொத்துவில் பிரதேச செயலாளருக்கு எழுத்துமூலம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பிரதிகளை எமக்கும் அனுப்பியிருந்தார்.

ஆனால் பொதுமக்கள் கூறுவதுபோன்று இன்னும் மயானம் அமைக்க காணி ஒதுக்கப்படவில்லை. விரைவில் அவருடன் தொடர்;புகொண்டு இவ்வேலையை முடித்துதருமாறு கேட்கவிருக்கின்றேன்.
அண்மையில் பொத்துவில் செங்காமம் கிராமத்தில் சிங்கள சகோதரர் ஒருவர் காலமாகிவிட்டார். ஆனால் அவரின் பூதவுடலை அடக்கம் செய்வதில் பாரிய சிக்கல் எழுந்தது காரணம் அங்கு தமிழ் சிங்கள இனத்தவர்கள் வசிக்கின்ற போதும் அவர்களுக்கான பொதுமயானம் இல்லை ..அங்கு இருப்பது முஸ்லிம் இனத்தவரின் மையவாடி மாத்திரமே. அதனால் காலம்சென்றவரின் பூதவுடல் அடக்கம் செய்வதில் உண்டான சிக்கல் காரணமாக பிரதேசசபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கவேண்டும்.இல்லாவிடில் ஐந்து கிலோமீட்டர் தள்ளி உள்ள பொத்துவில் பொதுமயானத்திற்குத்தான் கொண்டுவரவேண்டும். இது பாரிய சிரமம் ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். மரணம் எல்லோருக்கும் பொதுவானது….எனவே யாராயினும் மனிதாபிமானத்துடன் அணுகி 5கிலோமீற்றர் சிரமத்தைத் தவிர்த்து சொந்த இடத்திலேயே அடக்கம்செய்ய வழிவகுக்குமாறு வேண்டுகின்றேன். என்றார்.

சாதிப்பாரா பார்த்தீபன்? பொறுத்திருந்து பார்ப்போம்.