கொக்கட்டிச்சோலைப் பகுதி நெல்லை மட்டுமல்ல நல்ல சொல்லை விளைவிக்கும் மண். – மா.உதயகுமார்.

(படுவான் பாலகன்)  தமிழர்களது பண்பாடுகளையும், கலை, கலாசாராத்தினையும் பேணி பாதுகாக்கின்ற கிராமங்களிலே கொக்கட்டிச்சோலை பகுதி முதன்மையானது. இந்த மண் நெல்லை மட்டுமல்ல நல்ல சொல்லையும் விளைவிக்கும் மண். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றத்தினால் பழக்கப்பட்ட மகாபாரதம் குருசேத்திரத்தில் இடம்பெற்ற 17ம், 18ம் போர் வடமோடி கூத்து அரங்கேற்ற நிகழ்வு இரவு(19) இடம்பெற்ற போது, ஆரம்ப நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களிலே பிரதேசத்தில் ஏற்பட்ட துரதிஸ்டவசமான சம்பவங்களின் போதும், இப்பிரதேசத்தில் உள்ள கலைஞர்கள், இப்பிரதேசத்திலே தமிழையும், கலையையும் வளமாக வளர்த்தெடுத்தார்கள். அவ்வாறானவர்களை வள்ளல்லர்களாக கருதிநிற்கின்றேன்.

2000ம் ஆண்டு காலப்பகுதியில் இம்மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும் தமிழின்பால் கொண்டிருந்த அன்பினையும், கலையின் பால் கொண்டிருந்த மோகத்தினையும் விளையாட்டிலே கொண்டிருந்த ஆர்வத்தினையும் குறைத்துக்கொள்ளவில்லை. பல்வேறு இழப்புக்கள், துன்பதுயரங்களுக்கு மத்தியில் இந்த பிரதேசத்திலே தமிழும், கலையும், கலாசாரமும், விளையாட்டும் வளர்க்கப்பட்டன.

வெளிப்புற காரணிகளின் தாக்கங்களினால் எம்மத்தியிலே மேலைநாட்டவர்களின் கலாசாரங்களும் உள்நுழைகின்றன. அவ்வாறான சூழலில் ஒரு சமூகமே ஒன்றிணைந்து தமிழர்களுடைய விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

71வருடங்களின் பின் இதே கிராமத்தில் மீண்டும் அரங்கேற்றப்பட்ட குருசேத்திரன் போர் கூத்தின் ஆரம்ப நிகழ்வில், கூத்தில் பாத்திரமேற்று நடித்த கலைஞர்கள், ஏட்டண்ணாவியார், அண்ணாவியார், களரி முகாமையாளர், கலைமன்ற தலைவர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர், கொக்கட்டிச்சோலை பிரதேசசபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராஜா, அதிகாரிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.