மட்டக்களப்பில் நாம் நினைவு தினம் செய்யாது விட்டிருந்தால் எந்தக்கொம்பனும் நினைவு தினத்தை செய்திருக்கமாட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் ஒன்பதாம் ஆண்டு நினைவு வணக்கம் யார் தலைமையில் செய்ய வேண்டும் என்பதற்கு பலத்த போட்டியும் பொறாமையும் ஒற்றுமையாக தீர்மானம் எடுக்கமுடியாமல் வக்கற்றவர்களாக திண்டாடும் நிலையை இப்போது பார்க்கின்றோம் ஆனால் முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் எட்டாம் ஆண்டு நினைவுவணகம் வரையும் மட்டக்களப்பில் தொடர்ந்து எந்த போட்டி பொறாமையுன்றி பல அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நடத்திய பெருமை எம்மையே சாரும் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையும் கற்சேனை கண்ணன் சனசமூக நிலையமும் இணைந்து தவிசாளர் சி.புஷ்பலிங்கம் தலைமையில்  நடத்திய சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது மேலும் கூறிய அவர்
இக்கட்டான காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய நாம் துணிந்து நடத்தினோம் தற்போது சிலர் அதை குறுகிய அரசியலுக்காக அந்த நினைவுகளை அரசியல் கட்சியோ அரசியல் சார்ந்தவர்களோ செய்யக்கூடாது என நிபந்தனைகளை வைப்பதையும் இதையிட்டு தினமும் ஊடக சந்திப்புக்களும் கலந்துரையாடல்களைம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை முன்வைப்பதையும் காணக்கூடியதாக உள்ளது
உண்மையில் என்னைப்பொறுத்தமட்டில் எனது தனிப்பட்ட கருத்து முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதல்ல அது பரந்த அரசியல் நோக்கம் கொண்ட ஒரு நிகழ்வாகவே நான் பார்கிறேன்.
இனப்படுகொலை ஏன் எமது மக்களுக்கு ஏற்பட்டது ஒரு விடுதலைக்கான அரசியல் போராட்டம் ஆயுதரீதியாக மகா தியாகங்களை செய்த எமது தமிழர்களின் பற்றுறுதியான போராட்டத்தை அடக்கவேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசு உலகத்தில் உள்ள இருபதுக்கு மேற்பட்ட நாடுகளின் அரசியல் ரீதியான உதவிகளைப்பெற்று எமது உன்னத விடுதலை இயக்கமான விடுதலைப்புலிகளையும் எமது மக்களையும் இனப்படுகொலை செய்தனர் .
அது அரசியல் ரீதியான போராட்டமே அன்றி வேறு எந்த உள்ளாந்த ரீதியான செயலுமில்லை அரசியல் விடுதலைக்காகவே எமது இலட்சக்கணக்கான மக்களை நாம் முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தோம் அபிவிருத்திக்காகவோ அல்லது வாழ்வாதாரத்துக்காகவோ அந்த மக்கள் இறக்கவில்லை அந்த உன்னத எமது உறவுகளை எமது விடுதலைக்காக ஆகுதியான தமிழ் மக்களை நாம் அரசியல் ரீதியாக நினைவுகூருவதில் என்ன தப்பு உள்ளது.
ஒருவேளை மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகியநாம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவை நினைவுகூராமல் விட்டிருந்தால் எந்த கொம்பனும் அந்த நினைவை செய்திருக்க மாட்டார்கள். நாம் முள்ளிவாய்க்கால் நினைவை மட்டுமல்ல மாவீரர் நினைவு, அன்னைபூபதி நினைவு ,கொக்கட்டிச்சோலை,சத்துருக்கொண்டான்வந்தாறுமூலை,புதிர்குடியிருப்பு படுகொலை நினைவுகளை தமிழ்தேசிய கூட்டமைப்பால் வருடங்கள் தோறும் நெருக்கடியான காலத்தில் இருந்து இப்போதுவரை நடத்துகின்றோம்.
யாரும் எங்களிடம் குறுகிய அரசியல் லாபத்துக்காக செய்வதாக நினைத்தால் அவர்களின் மடமைத்தனமாகவே அதை பார்க்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலவேளை முள்ளிவாய்க்கால் நினைவை அல்லது வேறு படுகொலை நினைவுகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்யாமல் விட்டிருந்தால் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவுக்கு அரசியல் வாதிகள் வேண்டாம் என்று தற்போது கூறும் தரப்பினர்களே மாறி எமக்கு விரல்நீட்டி கேட்டிருப்பார்கள் தமிழ்தேசியகூட்டமைப்பு என்ன செய்கிறது முள்ளிவாய்கால் நினைவை ஏன் நடத்தவில்லை இப்படியான விமர்சனங்களும் எமக்கு வந்திருக்கும் என்பது உண்மை.
   எமது மண்ணில் இடம்பெற்ற அத்தனை படுகொலைகளும் இனப்படுகொலைதான் அத்தனை படுகொலைகளும் அரசியல் படுகொலைகள்தான் இதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும் .
எமதுமண்ணில் சுமார் ஐம்பதாயிரம் மாவீரர்கள் இந்த மண்ணுக்கு வித்தாகியுள்ளனர் அவர்களும் எமது இன விடுதலை என்ற அரசியல் இலட்சியத்திற்காகவே மரணித்தனர் அரசியல் என்பது எமது இனவிடுதலையை நோக்கிய சகல போராட்டங்களும் அரசியல் சார்ந்ததுதான் என்பதை நாம் மறுக்கமுடியாது
அந்த அத்தனை படுகொலைநினைவுகளை அரசியல் கட்சியான தமிழ்தேசியகூட்டமைப்பு முன்எடுப்பதில் என்ன தப்பு உள்ளது இராணு கெடுபிடிகள் அச்சுறுத்தல் தடைகள் ஏற்படும்போது அதற்கு முகம் கொடுக்க அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் தேவை ஆனால் அச்சுறுத்தல் தடைகள் அற்ற தற்போதய காலத்தில் அரசியல் வாதிகள் தேவையில்லை இது என்ன நியாயம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வணக்க நிகழ்வை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றி வணங்க எல்லாத்தமிழர்களுக்கும் எல்லாமாவட்ட மக்களுக்கும் வடகிழக்கு மக்காளால் ஏற்றுக்கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் உரிமையுண்டு அதை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை அப்படி தடுப்பவர்களே குறுகிய நோக்கம் உடையவர்கள் என்பதை மக்கள் உணரவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் கடந்த இரண்டுவருடங்கள் மட்டுமே அந்த இடத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது இந்த வருடத்துடன் மூன்றுவருட நினைவுகளை முள்ளிவாய்க்கால் மண்ணில் செய்யும் நிலை ஏற்பட்டது அதற்கு முந்திய ஆறு நினைவுகளையும் நாம் அங்கு செல்லாத போதும் ஏதோ வசதியான இடங்களில் நடத்தினோம் என்பதை அறிந்து கொண்டு இந்த வருடமும் போட்டி பொறாமை இன்றி ஒற்றுமையாக செய்வதற்கு அனைத்து தரப்பினரும் விட்டுக்கொடுப்புடன் முன்வரவேண்டும் எனவும் மேலும் கூறினார்.