மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் பணிப்பெண்ணாக சென்றுள்ளனர்

0
623

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் கீழைத்தேய நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மேலைத்தேய நாடுகளுக்கு சென்றவர்கள் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் கிழைத்தேய நாடுகளில் பணிப்பெண்களாக உள்ளவர்களில் அதிகம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களாகவே உள்ளனர்.

இலங்கையில் வறுமையில் 03வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 400 மில்லியன்கள் மதுபானத்திற்காக செலவிடப்படுகின்றது. இருப்பினும் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவுகள் வறுமையில் உச்ச நிலையில் இருக்கின்றன. இவை கல்வியில் கூட பாதிப்பைச் செலுத்துகின்றது இவற்றில் மாற்றம் வேண்டும்.

இலங்கையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாகாணம் கிழக்கு மாகாணம் ஆகும். அதேவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையோடு கல்வி ரீதியாக பாரிய சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற வலயமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்கள் இருக்கின்றது.

கல்குடா வலயத்திலும் வாகரைக் கோட்டம் கல்வி நிலையில் வளப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக வாகரைப் பிரதேசத்திலே கல்வி ரீதியாக ஓரளவு முன்னேற்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. இருப்பினும் இன்னும் முன்னேற்றங்கள் தேவையாக இருக்கின்றது.

எல்லாவற்றையும் இழந்த எமது சமுகம் கல்வியில் முன்னேற வேண்டும். எமது சமுகத்தின் மத்தியில் சட்டத்துறை சார்ந்தவர்கள், வைத்தியத் துறையினர், பொறியியலாளர்கள் மிகக் குறைவு எனவே அவற்றை எமது சமுகத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

எமது கலை மற்றும் வர்த்தகப் பட்டதாரிகள் வேலைக்காக வீதிகளில் இருந்து போராடுகின்ற மிகத் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள். தற்போது அவர்களுக்காக நடைபெறுகின்ற நேர்முகப் பரீட்சை கூட ஒரு பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. அதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

ஒரு பிள்ளையைக் கற்பிப்பதற்காக பெற்றோர்கள் அனுபவிக்கின்ற வேதனை கிராமப் புறங்களில் அதிகமாக இருக்கின்றது. அப்படி கஷ்டத்தின் மத்தியில் கற்பித்து பல்கலைக் கழகம் அனுப்பிய பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் கூலி வேலைகளுக்குச் செல்லுகின்றார்கள். இதனால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்கின்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைகின்ற நிலையும் காணப்படுகின்றது. எனவே இந்த விரக்தி நிலையை மாற்ற வேண்டும்.

மாணவர்கள் பட்டம் பெற்று வெளியில் வந்தவுடனே அவர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறான கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். ஊட்டப்படும் கல்வி தொழில் வாய்ப்பினைப் பெறக் கூடிய கல்வியாக இருக்க வேண்டும் என்றார்.