வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம், கிண்ணையடி கிராம சேவை அதிகாரி ஜெ.லோபனராஜ், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய அதிபர் ரி.இதயராஜா மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது யானைக்கு கண் வைத்தல், ஆண், பெண் மை முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், ஆண், பெண் ஜோடியாக போத்தலில் நீர் நிரப்புதல், அப்பிள் சாப்பிடுதல், வினோத உடை, தலையமைச் சமர் உட்பட பல்வேறு தமிழ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

கிண்ணையடி பிரதேசத்தில் 2016ம், 2017ம் ஆண்டுகளில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான பதினொரு மாணவர்களுக்கு கழகத்தினால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.